இப்போது வருகிற படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ நடிக்க வருபவர்கள் பலரிடமும் நல்லதொரு கதை இருக்கிறது. கூட்டத்தில் வரும் ஒருவராக முகம் காட்டியதிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லும் வில்லன் நடிகர் என்கிற நிலையை எட்டியிருப்பவர் நடிகர் அருள் .இயக்குநர் பாலு மகேந்திராவின் மாணவர்.
நடிகர் அருளின் முன் கதைச் சுருக்கம்:
” நான் பி.எஸ்ஸி தொடங்கி எம்.பி.ஏ வரை பல படிப்புகள் முடித்தேன். ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலையில் இருந்தேன். மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினேன் . எனக்குச் சினிமா ஆர்வம் வந்ததும் ஒரு கட்டத்தில் அதாவது 2009-ல் வேலையை விட்டு விட்டேன்.
முதலில் எனக்கு இயக்குநராக வேண்டும் என்று தான் ஆசை இருந்தது. 2010 -ல் பாலுமகேந்திரா சாரைப் போய்ப் பார்த்தேன்.
அவர் என்னை மேலும் கீழும் பார்த்தவர். ‘உனக்கு நாற்பது வயதாகிறது. நீ நடிக்க முயற்சி செய்வதே உனக்குப் பாதுகாப்பு’ என்றார். பிறகு கூட படம் இயக்கலாம். இப்போது நடிகனாகப் பயிற்சி எடு என்று அவரது சினிமாப் பட்டறையின் நடிப்புப் பயிற்சி மாணவனாக்கிக் கொண்டார்.
ஆறு மாத காலப் பயிற்சி. அது குருகுலவாசம் போன்றது. வெறும் நடிப்பு மட்டுமல்லாது சினிமாவின் பல பரிமாணங்களையும் செயல்பாடுகளையும் சொல்லித் தந்தார், பல உலகத்தரமான படங்களைப் போட்டுக் காட்டி அதன் சிறப்புகளைச் சொல்வார்.
எனக்கு நம்பிக்கை வந்தது. அதன் பின் வெளியே வந்து வாய்ப்பு தேடினேன். சில குறும்பட வாய்ப்புகளில் நடித்தேன். அப்படி நிறையவே வாய்ப்புகள் வந்தன இப்படியே 2014 வரை 32 குறும்படங்கள் , 18 விளம்பரங்கள் என்று நடித்தேன். ஒரு கட்டத்தில் இவற்றை நிறுத்திக் கொண்டு சினிமா தான் என்று வாய்ப்பு வேட்டையில் இறங்கினேன். ” என்று சற்றே நிறுத்தினார்.
சினிமாவில் வாய்ப்பு எளிதில் கிடைத்ததா? என்ற போது , “போய் வாய்ப்பு கேட்டதுமே கிடைத்துவிடும் என்று நான் கற்பனை செய்து கொள்ளவில்லை. போராடித்தான் இலக்கை அடைய முடியும் என்று நம்பினேன்.
தினமும் அலுவலகம் செல்வது போல சாப்பாட்டு மூட்டையுடன் கம்பெனி கம்பெனியாக படியேறுவேன். முகவரி தெரிந்த ஒருவரையும் கூட அழைத்துக் கொண்டு படியேறுவேன்.
இப்படி 3 ஆண்டுகளில் சுமார் 4500 இடங்களில் வாய்ப்பு கேட்டு இருப்பேன்.
முதலில் கூட்டத்தில் ஒருவராக வரும் வாய்ப்பு வந்தது. பிறகு முகம் தெரியும்படி வந்த முதல் படம் முரண். பிறகு எங்கேயும் எப்போதும் , எதிர் நீச்சல் , மாற்றான் போன்ற 18 படங்களில் மூன்று நான்கு காட்சிகளில் நடித்திருப்பேன். முதலில் விடியும் முன் படத்தில் 3 வில்லன்களில் ஒருவனாக வருவேன். நல்ல அடையாளமாக இருந்தது.
பிறகு கவனம் , அமரகாவியம் ,விழி மூடி யோசித்தால் , சிங்கம் போன்ற படங்கள். குறிப்பாக ஜீவாசங்கரின் அமர காவியம் மறக்க முடியாது. அதில் 16 காட்சிகளில் வந்தேன். எமன் படத்தில் வயதான வில்லன் வேடத்தில் நடித்தேன் என் நடிப்பை பலரும் பாராட்டினர் அந்த படத்தில் நான்தான் வில்லன் என்பது வெளியில் நிறைய பேருக்கு தெரியாது. வயதான கெட்டப் அந்த மாதிரி. பிறகு துருவங்கள் 16ல் நல்ல அடையாளம் கிடைத்தது. அதே கார்த்திக் நரேனின் நரகாசுரன் படத்தில் என்னை நம்பிக்கையுடன் அழைத்து வாய்ப்பு கொடுத்துள்ளார். இப்போது 60 வயது மாநிறம் படத்தில் என் பாத்திரம் பெயர் சொல்லும்படி நல்ல வாய்ப்பாக இருக்கும். இப்போது குற்றம் புரிந்தால் , உணர்வு உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறேன்” என்கிறார்.
நடிப்பில் எது இவரது எதிர்பார்ப்பு ? என்று கேட்டால் , ” சிறிய படம் பெரிய படம் என்கிற பாகுபாடு நான் பார்ப்பதில்லை, நமக்கு நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று மட்டுமே பார்ப்பேன். நான் இயக்குநரின் நடிகன். அவரது கைப்பாவையாக இருக்க,வே விரும்புகிறேன். ஒரே நாளில் உயரம் தொட விரும்பவில்லை. திடீரென்று மேலே வர ஆசைப்படவில்லை. ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக படிப்படியாக முன்னேறவே ஆசை. ” என்கிறார் உறுதியான நம்பிக்கையுடன்.