இளமையை தொலைத்து 27 ஆண்டுகள் ஆகி விட்டது.
இழந்ததை மீட்டுத்தரும் காவல் துறையினரால் அந்த இளமையை மீட்டுத் தரமுடியுமா?
பேரறிவாளன் உட்பட அந்த ஏழு பேருக்கும் எத்தகைய மன உளைச்சலை அரசுகள் கொடுத்திருக்கின்றன என்பதை படம் போட்டு விளக்க முடியாது.
எழுவரையும் மாநில அரசு விடுவிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக சொல்லிவிட்டது.
மாநில அரசும் தீர்மானம் போட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதை தெளிவாக விளக்கி விட்டார் அமைச்சர் ஜெயகுமார்.
ஆனால் மத்திய அரசின் கைப் பாணம் தான் ஆளுநர்கள்.
ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்கு ம.அரசு சம்மதிக்குமா?
விடுதலை செய்வதால் பிஜேபிக்கு என்ன லாபம் கிடைக்கும்? செய்யாவிட்டால் என்ன நடக்கும் ?
இந்நேரம் உளவுத் துறையின் தகவல் கிடைத்திருக்கும்.
“எங்களால்தான் எழுவரை விடுதலை செய்ய முடிந்தது “எனச்சொல்லி எதிர்வரும் தேர்தலில் அதிமுகவினர் ஓட்டுக் கேட்பார்கள் . அறுவடையை அவர்கள் மட்டும் அனுபவிக்கக்கூடாது .
நமக்கும் பங்கு வேண்டும். எனவே முடிவைத் தள்ளிப் போடுவோம் என முடிவு எடுத்தால் தமிழர்களின் விடுதலைத் தள்ளிப் போகலாம். அதனால்தான் அரசியல் ஆஷாடபூதி
சுப்பிரமணியன் சுவாமி அழுத்தம் கொடுத்து சொல்கிறார்.
“கவர்னர் அந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய மாட்டார்”
அப்படியானால் நீதி , நேர்மை, கண்ணியம் என்பதெல்லாம் வலியவர்களின் கைக்குருவிதானா?