நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் மற்றும் விஷால் ஆகியோருகிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இநநிலையில் இருவரும் தங்களுக்கு ஆதரவு திரட்டும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை நடிகர் விஷால் தலைமையில் திருச்சியில் 10 ஜோடிகளுக்கு அவரது ரசிகர் மன்றம் சார்பில் இன்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.திருச்சியில் உள்ள ரோஷன் திருமண மண்டபத்தில் 10 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க திருச்சி மாவட்ட விஷால் மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். விஷால் வந்தவுடன் அவர் தலைமையில் 10 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அந்த ஜோடிகளுக்கு விஷால் ரசிகர் மன்றம் சார்பில் 51 சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. திருமண ஜோடிகளை விஷாலின் தாய், தந்தை ஆசிர்வாதம் செய்தனர். இந் நிகழ்ச்சியில் விஷாலின் சகோதரி ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டார். திருமண நிகழ்ச்சியில் விஷால் ரசிகர் மன்றத்தின் மாநில தலைவர் ஜெயசீலன், செயலாளர் ஹரி, திருச்சி மாவட்ட தலைவர் பென்னி, நிர்வாகிகள், ரசிகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நிகழ்ச்சிக்கு பிறகு விஷால் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் விழா மேடையில் ஏறியதும் என் அம்மா என்னை பார்த்து உனக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்டிட்டிருக்கோம் ஆனால், நீ 10 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறாயே என்று கூட கேட்டார். ஆனால்,நான் என் லட்சியம் முடிவடையாமல் திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை.இன்றில் இருந்து எனக்கு 11 தங்கைகள். என் தங்கைகளின் கணவன்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர்கள் கண்கலங்கினால் நீங்கள் தமிழகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் தேடி வந்து தட்டிக் கேட்பேன். எங்கு தவறு நடந்தாலும் கேள்வி கேட்பது என் ஸ்டைல். நான் 10 ஜோடிகளுக்கு ஏதோ எண்ணத்தில் திருமணம் நடத்தி வைக்கவில்லை. நாடக கலைஞர்களுக்கு கட்டிடம் கட்டித் தருவேன். நடிகர் சங்க தேர்தலில் இளம் நடிகர்கள் நிச்சயம் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். தேர்தல் என்றால் அனைவரும் வாக்குறுதி அளிப்பார்கள். ஆனால் இளம் நடிகர்களோ தேர்தலுக்கு முன்பே வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள்.விஜயகாந்த் அரசியல் கட்சி துவங்கியதால் தான் நடிகர் சங்க பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். இது சரத்குமாருக்கு புரிந்தால் நன்றாக இருக்கும். சங்கத்தில் அரசியல் கூடவே கூடாது என்கிறவர்கள் முதலில் அரசியலில் இருக்கக் கூடாது இவ்வாறு விஷால்.கூறினார்.