பிக்பாஸ் 2 -வில் இதுவரை இல்லாத எதிர்பார்ப்பு நேற்றைய ஞாயிறு நிறையவே இருந்தது.
எப்போது வெளியேற்றம் நடக்கும் , இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு போகலாம் என்கிற ஆர்வம் .
அந்த இசை நிகழ்ச்சியில் என்ன கொடுமை என்றால் ஒவ்வொரு இடைவெளிக்கும் 19 விளம்பரங்கள்.ஐந்து நிமிடங்களை சாப்பிட்டு விடுகின்றன.
பிக்பாஸில் மற்ற அனைவரையும் விட உடையில் அன்று தனிக்கவனம் செலுத்தி இருந்தவர் மும்தாஜ் . குறியீடு போல வெண்ணிற ஆடை!
வெளியேறப் போவது இவராகத்தான் இருக்கமுடியும் என்பதைப் போல கொண்டைப் போட்டு வெள்ளை நிற பிளாஸ்டிக் பூக்கள் வேற.
“நெற்றிச்சுட்டி பிரமாதம்” என கமலே கவனித்துப் பாராட்டும் அளவுக்கு ஒப்பனை இருந்தது.
முகத்திலும் கவலை படர்ந்திருந்தது. அதுநாள் வரை எஜமானி மாதிரி அதிகாரம் செலுத்தியவரா இவர் என நினைக்கத் தோன்றியது.’
உடல் நலம் இல்லை.எனக்கு அது ஒத்துக்காது ,இது ஒத்துக்காது என உடலை நலத்தை காரணம் காட்டி வெட்டியாக இருந்தவரா இப்படி ஒடுங்கிப் போயிருக்கிறார் என நினைக்காமல் இருக்க முடியவில்லை. படங்களில் காட்டாத நடிப்பை எல்லாம் பிக் பாஸில்தான் கொட்டி இருந்தார்.
கடைசியாக “இந்த வார எவிக்சன் மும்தாஜ் “என கமல் சொன்னதும் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்த கரகோஷத்தையும் சந்தோஷத்தையும் பார்க்க வேண்டுமே!
இத்தனை வெறுப்பா என நினைக்கத் தோன்றியது. டி.வி.க்கு முன்பாக அமர்ந்திருந்தவர்களும் கைதட்டுகிற அளவுக்கு கோபத்துக்கு ஆளாகி இருந்திருக்கிறார் மும்தாஜ் !