ஆலவாய் நகரின் ஸ்தல விருட்சம் கடம்ப மரம். மதுரையை கடம்பவனம் என சொல்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், சொக்கநாதரின் சந்நிதி பிரகாரத்தில் துர்க்கை அம்மனின் சந்நிதிக்கு எதிரில் பட்டுப்போன ஆதி கடம்ப மரத்தை பாதுகாப்புடன் வைத்திருப்பதை இன்றும் காணலாம்.
மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் பட்டுப்போன கடம்ப மரம் இருக்கிறது. இதனுடைய புனிதம் கருதியோ அல்லது ஏதாவது நம்பிக்கையின் பேரிலோ வெட்டாமல் விட்டு வைத்திருக்கிறார்கள். இப்போது எல்லோருடைய வீட்டிலும் கியாஸ் அடுப்பு வந்து விட்டதால் விறகாமல் தப்பி இருக்கிறது கடம்பம்.
இதை மீண்டும் துளிர் விடச் செய்ய முடியுமா?
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உண்மையான தொண்டர் நடிகர் விவேக். ஊரெல்லாம் மரக்கன்றுகளை விடாமல் நட்டு வருகிறவர். இவர் நட்டு வைத்த மரக்கன்றுகளை அரசாங்கம் பாதுகாத்து இருந்தால் ஊரில் ஓரளவுக்கு புதிய மரங்களைப் பார்த்திருக்கலாம். அவர்களுக்கு மண், மலையை லவட்டுவதற்கே நேரம் போதவில்லை.!
பாப்பாபட்டி மக்களுக்கு ஒரு யோசனை வந்திருக்கிறது.
நடிகர் விவேக்கிடம் கேட்கலாமா?
கேட்டிருக்கிறார்கள். அவரும் பாப்பாபட்டி அருகில் உள்ள அறிவியலார்களிடம் சொல்ல ஒரு குழு புறப்பட்டு சென்றிருக்கிறது.
நெய், பருத்திக்கொட்டை, வேப்பங்கொட்டை இவைகளுடன் இன்னும் சில மூலிகைகளையும் கலந்து விழுதாக அரைத்து மரத்தைச்சுற்றி அப்பி இருக்கிறார்கள். அவை காய்ந்து போகாமல் இருக்க அதன் மீது சாக்கு, வைக்கோல் பிரி கொண்டு சுற்றி எப்போதும் ஈரப்பதமுடன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
.இரண்டு மாதம் சென்றபின் பட்ட மரம் தளிர்த்திருக்கிறது. கொழுந்து இலை வந்திருக்கிறது.
இதுதான் பசுமை விஞ்ஞானி நம்மாழ்வாரின் தத்துவம். இதை பின்பற்றினாலே நாடு வளமாகி விடும்.