நமக்குத் தெரிந்தவரை “இவருக்கு விஞ்சிய நடிகர் எவருமில்லை” என்று சொல்லப்பட்டவர்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்,கவுண்ட மணி, நாகேஷ் , ஆகியோர் வரிசையில் வடிவேலுவை சேர்த்துக் கொள்ளலாம்.
இன்று அவருக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் போட்டிருக்கிறது. இது அவரது திரை உலக வாழ்க்கைக்கு கமாவா, முற்றுப் புள்ளியா என்பது தெரியாது. அவரது இடத்தை யாராவது நிரப்ப முடியுமா?
முக்கியமான கேள்வி.!
பதில் இருக்கிறதா, யாராவது தெரிகிறார்களா?
சூரி அதிகமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
யோகிபாபுவும் நிறைய படங்களில்.! அவருக்கு லீடு கொடுக்கும் கூர்க்கா கேரக்டரில் நடிக்கப்போகிறார். இவர்களில் யாராவது வடிவேலுவின் இடத்தைப் பிடிக்க முடியுமா? சூரி, யோகிபாபு இருவர்தான் இன்று லீடிங் காமடியன்ஸ்.! தினசரி சம்பளத்தில் வேலை பார்க்கிறார்கள். முதன் முதலில் சிரிப்பு நடிகர்களில் இந்த சிஸ்டத்தைக் கொண்டு வந்தவர் கவுண்டமணிதான்! அவருக்குப் பிறகு வைகைப்புயல்!
வடிவேலுவுக்கு ஆதரவாக இண்டஸ்ட்ரியில் இருக்கிறவர்கள் என்ன சொல்கிறார்கள்?
பெயர் குறிப்பிட விரும்பவில்லை!
“இன்னொரு எம்.ஜி.ஆர். இவர்தான்னு ஒரு நடிகரை சொல்லுங்க. நான் உங்க கேள்விக்குப் பதில் சொல்றேன்! வடிவேலுக்கு மார்க்கெட் இல்ல என்பதால் அவர் இடத்தில் மற்றவர் உட்கார்ந்து விட முடியும்கிறது நினைச்சுக்கூட பார்க்க முடியாததுங்க!
வடிவேலு நூறு படத்துக்கு மேல நடிச்சு இருக்கிறார் . ஆனா அத்தனை பட காமடியையும் டி.வி.ல போடற தில்லியே! மக்களும் குறிப்பிட்ட படங்களின் காமடியைத்தானே மீம்ஸ் போடுறாங்க.. எப்படி கவுண்டமணி காமடியை இப்பவும் மறக்க முடியாதோ அது மாதிரிதான் வடிவேலுவின் காமடியும்!
இவருக்கு இருக்கிற காமடி சென்ஸ், பாடி லாங்குவேஜ் யாராலும் ஜெராக்ஸ் எடுக்க முடியாதது.
நல்ல காமடி சீன் எழுத தெரிந்த ரைட்டர்ஸ், டைரக்டர்ஸ், மறுபடியும் வடிவேலுக்கு கிடைத்தால் அந்தாளு கிங் தான்! பூபதி பாண்டியன் காமடியில் வின்னர் படத்தை மறக்க முடியுமா ? நாய் சேகர் கேரக்டர்ல வேற எந்த நடிகர் நடித்திருந்தாலும் அது உருப்பட்டிருக்காது. டைரக்டர் சுராஜ் ஆள் உயர மாலையைப் போட்டு “உன்னால்தான் படம் ஹிட்”னு சொன்னதை மறக்க முடியல. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை எடுத்துக்குங்க. மீம்ஸ் இப்பவும் தூள் பறக்குதே.!
நடிகர் திலகம் சிவாஜி மனம் நிறைய “நீ நல்லா வருவடா”ன்னு வாழ்த்தினார். வடிவேலுவை படப்பிடிப்புக்கு தனி அம்பாசடர் காரில் கூட்டிவரச் சொன்னாராம் கமல். சினிமா கம்பெனி காரில் ஏறிய முதல் சம்பவம்னு வடிவேலுவே சொன்னது இது!
சின்ன கவுண்டர் படத்தில் சின்ன வேஷம்தான் வடிவேலுக்கு.!நடிக்கிறதை பார்த்து விட்டு விஜயகாந்த் கேட்டிருக்கிறார். ‘மதுரையில் இருந்து வந்த பையன்’னு சொன்னதும் ஆர்.வி. உதயகுமாரிடம் “கொஞ்சம் எக்ஸ்டிரா சீன்ஸ் எழுதுங்க” என்றிருக்கிறார் கேப்டன் .இவருக்கு மதுரைக்காரன்கிற பாசம்!
இப்படி அதிகமானவர்களின் அபிமானத்தை பெற்றிருந்தவர் வடிவேலு. இவருடைய பாடி லாங்குவேஜ்,டைமிங், காமடி சென்ஸ். வேறு யாருக்கும் வராது. பார்த்திபன்- வடிவேலு காம்பினேஷனை உங்களால் மறக்கமுடியுமா?இப்படி நிறைய சொல்லிட்டேப் போகலாம்.
சிவகார்த்திகேயனின் உதவியால்தான் சூரி இந்த அளவுக்கு வர முடிஞ்சிருக்கு .
யோகி பாபுவுக்கு அவருடைய மாடுலேஷன்.
இருவரையும் ரசிக்கலாம். கை தட்டலாம். நடிப்பைப் பொறுத்தவரை பாராட்டலாம். ஆனால் வடிவேலுவுக்கு இணையாக சொல்ல முடியாது. அவருடைய இடத்தை பிடித்து விடுவாங்கன்னு சொல்லவும் முடியாது. வடிவேலு வடிவேலுதான்!” என்றார்கள்.
ஒரு படத்தில் தன்னை ஒப்பந்தம் செய்ய வந்தவர்களிடம் “முதலில் வடிவேலுவின் கால்ஷீட் வாங்கிட்டு வாங்க” என்று சொன்னவர் ரஜினி காந்த். ஆக வடிவேலுவின் இடம் ?
அவருக்கே!