திருநெல்வேலி மாவட்டம் அருகில் உள்ள பாபநாசத்தில் ஒரு நேர்மையான கேபிள்டிவி உரிமையாளர் சுயம்புலிங்கம். (கமல்ஹாசன்) , அவருக்கு அன்பான மனைவி ராணி (கவுதமி)மற்றும் அழகான செல்வி (நிவேதாதாமஸ்),மீனா(எஸ்தர்) இரண்டு பெண்குழந்தைகள். சந்தோசமாக போய்க்கொண்டிருக்கும் அவர்களது மகளின் வாழ்க்கையில் வருண் பிரபாகர் என்கிற வக்கிரம் பிடித்த (ரோஷன்) இளைஞன் குறுக்கிட, குடும்பமே சின்னா பின்னாமாகி போய் விடுகிற நிலைமை! இக்கட்டான நிலையில், எதிர்பாராத வகையில் செல்வி,வருன்பிரபாகரை கொலை செய்து விட ,வேறு வழிதெரியாமல் குடும்பமே அக்கொலையை மறைக்கிறது.ஆனால் கொலை செய்யப்பட்டவன் உயர் போலிஸ் அதிகாரியின் மகன் என்பதால் சுயம்புலிங்கத்தின் குடும்பத்தையே அள்ளிக்கொண்டு போகிறது போலிஸ். அதன் பின் சுயம்புலிங்கத்தின் குடும்பம் சந்திக்கும் சம்பவங்களை படம் பார்ப்பவர்களின் நெஞ்சம் பதைபதைக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜீத்துஜோசப், மலையாளத்தில் த்ரிஷ்யம் ஆக வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி அத்தனையும் வெற்றி என்பதனால் இப்படம் தமிழிலும் ஹிட் அடித்திருக்கிறது. நவீன தொழில்நுட்பங்கள் அதிலும் குறிப்பாக நவீன செல்போன்களால் நடக்கும் சம்பவமே இந்தப்படத்தின் மையச்சிக்கலுக்குக் காரணம்.
மகாநதிக்கு பிறகு மீண்டும் ஓர் சாமான்ய குடும்பத் தலைவனாக பாபநாசம் கிராமத்தில் வாழ்ந்திருக்கிறார் கமல். முதல் அரைமணி நேரம் நம்மை நெளிய வைக்கும் திரைக்கதை .அதன்பிறகு வேகம் எடுத்தாலும் இடையிடையே தொய்வுகள் நம்மை சிறிது சோர்வடைய வைக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை ! .கதைப்படி கமல் ஒரு தனியார் கேபிள் டிவி முதலாளி. அதில் ஒளிபரப்பப்படும் அத்தனை படங்களும் அவருக்கு அத்துப்படியாக இருக்க, வாழ்வின் எல்லா சிக்கல்களுக்கும் ஏதோ ஒரு படக் காட்சியின் மூலம் முடிவைக் காண முடியும் என்று நம்புபவர். அப்படியே பலருக்கும் ஐடியாக்கள் சொல்லிக்கொண்டிருப்பவருக்கு தன் குடும்பத்தின் மீதே பேரிடி விழ,குடும்பத்தை காப்பாற்ற ,அவர் தன் சினிமா ஞானத்தையே மூலதனமாக்கி நடக்காத கதையை நடந்த காட்சிகளாக்கி நம்பவைத்து எப்படி வெல்கிறார் என்பதுதான் சிறப்பு. கஞ்சத்தனம் செய்வது, கவுதமியிடம் ரொமான்ஸ், குடும்பத்தைக் காப்பாற்ற பதறித்துடித்து திரிவது , தெளிவாகத் திட்டமிடுவது என ஒவ்வொரு காட்சியையும் கமல் சிக்சராகவே அடித்து தள்ளியுள்ளார். .கவுதமியிடம்,’ பொய்யே பேசக்கூடாது என்று சொல்லி வளர்த்த என் குழந்தைகளுக்கு நானே பொய்பேசக்கற்றுக்கொடுத்துவிட்டேனே! என்பதிலாட்டும், நீ பெரியமனசு இருக்கிறதால இப்படிச் சொல்றே, இதுவே உன் இடத்தில் அந்தஅம்மா இருந்தா இப்படிப் பேசியிருப்பாங்களா? என்பதிலாகட்டும்,கடைசியில், ஐஜி குடும்பத்திடம், இந்த பாபாநாசத்துல, முங்கி முங்கி எங்க பாவத்த கொஞ்சங் கொஞ்சமா கழிச்சிடறோம் என்று சொல்லிக் கமல் கலங்கும் காட்சி என அனைத்தும் உலகநாயகனின் நடிப்புக்கு கட்டியம் கூறுபவை! கமல் உள்பட எல்லா நடிகர்களும் வட்டார மொழிபேசி நடிப்பதில் மிகவும் கவனமாகவே இருந்திருக்கிறார்கள். என்பதை ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிகிறது. கமல் மனைவியாக கவுதமி, தோற்றத்தில் முதிர்ச்சி தெரிந்தாலும் கமலைப் பார்க்கும் காதல்பார்வையில் கிறங்க வைக்கிறார். திடீரென ஏற்பட்டுவிட்ட அசம்பாவிதத்தை அவர் எதிர்கொள்ளும் விதத்தில் நல்லநடிகை என்பதையும் நிருபித்து விடுகிறார். கஞ்சத்தனம் மிகுந்த அப்பாவைப் பாசமிக்க பெண்குழந்தைகள் என்னவெல்லாம் செய்யுமோ அவ்வளவும் இந்தப்படத்தில் இருக்கிறது. பெரியபெண்ணாக நடித்திருக்கும் நிவேதாதாமஸூம் சிறியபெண்ணாக நடித்திருக்கும் எஸ்தரும் கமல், கவுதமி ஆகிய இருவருக்கும் இணையாக நடித்திருக்கிறார்கள். வில்லன் ரோஷனின் அம்மாவாக வரும் ஆஷா சரத். ஐ.ஜியாக வரும்போது மிடுக்கிலும், அம்மாவாக உடையும்போது ஒடுக்கியும் நடிப்பில் பின்னியிருக்கிறார். இரண்டிலும் கலக்கிய இன்னொரு முகம் குட்டிப்பெண் எஸ்தருடையது. முரட்டுப் போலீஸ் தாக்குதலுக்கிடையில் குடும்பமே சிக்கித் தவிக்க, அஞ்சி நடுங்கி உண்மையைக் கக்கிவிட்டு அப்பாவிடம் வந்து ‘தான் செய்தது சரியா..?’ எனக் கேட்கும் குழந்தைத்தனத்தில் அசத்துகிறாள். காவல்துறை ஐஜியாக நடித்திருக்கும் ஆஷாசரத், மிடுக்கான நடிப்பில் யார்இவர்? என்று கேட்கவைத்திருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீராம், கலாபவன்மணி, இளவரசு, அருள்தாஸ் உட்பட படத்தில் நடித்திருக்கும் எல்லோருமே தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். குற்றவாளி எப்படியும் ஒரு தடயத்தை விட்டுவிட்டுச் செல்வான் என்கிற அடிப்படையை மீறாமல், எவ்வளவோ புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டாலும் கமல் மாட்டிக்கொள்ளுகிற மாதிரி திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது. காவல்துறை அத்துமீறி நடந்துகொள்ளும்போது குழந்தைகள் எங்கே உண்மையைச் சொல்லிவிடுவார்களோ என்கிற பதட்டம் நமக்கும் ஏற்பட்டு விடுகிறது. குழந்தைகள் முன்னால் பெற்றோரை அடித்துநொறுக்குவது, பெற்றோர் முன்னால் குழந்தைகளை அடிப்பது, என போலிஸ் காரர்களின் ஹீரோ தனத்தையும் தோலுரித்து காட்டியுள்ளனர்.சுஜித்வாசுதேவின் ஒளிப்பதிவு, ஜெயமோகனின் வசனங்கள், படத்துக்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றன. கிளைமாக்ஸ் காட்சியில் வருணின் பிணம் புதைக்கப்பட்டஇடம் பற்றி தெரிய வரும் போது ரசிகர்களின் விசில் சத்தம் காதை அடைக்கிறது. மொத்தத்தில் சில காட்சிகள் இடறினாலும் , குறிப்பாகப் பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் குடும்பத்துடன் பார்த்தே ஆக வேண்டிய படம் என்பதுடன் இதில் அவர்களுக்கு பாடமும் சொல்லப்பட்டிருக்கிறது. பாபநாசம்-குடும்பத் தலைவனின் பாசப்போராட்டம்! 3/5.