அண்மையில் வெளிவந்த இரண்டு பெரிய படங்களில் முதலிடம் பரியேறும் பெருமாளுக்கு.!
ஒடுங்கிப் படுத்துக் கிடந்தவன் தொடையில் கிள்ளி “முழிச்சிக்கோ, நீயும் மனுசன்தான், மரம் இல்லை, அடிமை இல்ல ” என எழுப்பிவிட்டவர்கள்தான் அம்பேத்கர், பெரியார்.
விழித்த பின்னரும்அப்படியே அடங்கிக் கிடந்தால் எனக்கு நடந்ததுதான் இனியும் தொடரும் என்று செவிட்டில் அறைகிறான் இந்த பரியேறும் பெருமாள்.
கதையின் ஒட்டு மொத்த கருத்தையும் குறள் மாதிரி கிளைமாக்சில் சொல்லிவிடுவான் கதாநாயகன் கதிர்.
ஆனந்தியின் அப்பா மாரிமுத்துவுக்கு மகள் ஆனந்தியின் மீது ஒரு சந்தேகம். கதிரை விரும்புகிறாளோ மகள்? விரும்பினாலும் கட்டிக் கொடுக்கத்தயார் என்கிற மனநிலைக்குத்தான் வந்திருக்கிறார். அதை ஜாடையாக “இப்படியேவா இருந்திறப் போவுது. நாளைக்கு காலம் மாறலாம்ல?”என்பார் கதிரிடம்.
இங்குதான் உச்சந்தலையில் கதாசிரியர் இயக்குநர் மாரி செல்வராஜ் நாயகன் வழியாக சம்மட்டியால் அடிப்பார் சத்தம் கேட்காமல்!
“நீங்க …நீங்களா இருக்கிற வரைக்கும், நான் நாயாகத்தான் இருக்கணும்னு நீங்க நினைக்கிற வரைக்கும் இங்கு எதுவும் மாறாது.இப்படியேதான் இருக்கும்” என்பான். அதில்தான் எத்தகைய வலி ஆதங்கம்..!
கதிரும் ஆனந்தியும் காதலர்கள் இல்லை,நண்பர்கள். உயர்சாதியான யோகிபாபுவும் ஒடுக்கப்பட்ட சாதியான கதிரும் எப்படி உயர்வான நண்பர்களோ அதைப் போலத்தான் கதிரும் ஆனந்தியும் கல்லூரியில் பழகி வருகிறார்கள்..
தனக்கு ஆங்கில கற்றுக் கொடுத்த ஆனந்தியை தேவதையாகப் பார்க்கிறான் கதிர் .இது தப்பாய்யா! சுற்றிலும் உள்ள உயர்சாதியினர் கண்களில் மட்டும் ஏன் இருள்.? கொலை வரைக்கும் போகிறது.
கதிர் ஆனந்தி இருவருக்கும் இடையில் நட்பைத் தவிர அதுநாள்வரை வேறு எதுவும் இல்லை என்கிற நிலையில் ஒடுக்கப்பட்டவன் என்கிற ஒரே காரணத்துக்காக மானம் மரியாதை எல்லாமே இழக்கவேண்டியதாக இருக்கிறது.
கதைக்குள் நாமும் பயணிப்பதைபோல உணர்வதற்கு காரணம் தொடக்கத்தில் இருந்தே திரைக்கதை சீராக செல்வது தான் .கதை மாந்தர்களும் தங்களை அந்த கேரக்டர்களுக்குள் நுழைத்துக் கொண்டு விட்டார்கள் .ஒருவரையும் குறை சொல்ல முடியவில்லை.
2005- ல் நெல்லை மாவட்டம் புளியங்குளம் கிராமம் நாயகனின் பிறப்பிடம். ஊரை விட்டு ஒதுங்கிய குக்கிராமம் ! பெருமாள் சுமாராக படிக்கிறவன் அவனுக்குரிய சலுகையைப் பெற்று சட்டக்கல்லூரி வரை செல்கிறான். அங்கு என்ன நடக்கிறது, ஆதிக்க சாதியின் சந்தேகத்திற்கு எப்படியெல்லாம் அவன் இரையாகிறான் என்பதை தைரியமாகவே சொல்லி இருக்கிறார்கள். மனிதனை மனிதனாகப் பார்க்க மறுக்கிறார்கள். படம் முழுவதும் நம்மை சூடாகவே வைத்திருக்கிறார் இயக்குநர்.
ஒரு கட்டத்தில் கதாநாயகனின் தந்தையை அவரது , தொழில் தொடர்பான பெண்மையான தோற்றம் காரணமாக கல்லூரிக்கு அருகில் அம்மணமாக ஓடவிடுகிற காட்சியில் நொறுங்கிப் போகிறோமே!. நமக்கே சூடேறுகிறது என்றால் மகனுக்கு எப்படி இருக்கும்? அங்குதான் அம்மாவை வெகு இயல்பாக பேச வைத்திருப்பார் இயக்குநர்.
“ஏன் கண்ணு முன்னாடியே அப்பாவை அம்மணக்குண்டியாக ஓட விட்டானுங்கம்மா!” என்பான் மகன்.
“அவருக்கு இது ஒன்னும் புதுசு இல்லியேப்பா !கூத்துக் கட்டி ஆடுற எடங்கள்ல அவரை பொம்பளன்னு நினச்சு தூக்கிட்டெல்லாம் ஓடிருக்காங்க.,சேலைய தூக்கிப் பாத்திட்டு ஆம்பளைன்னு அங்கேயே விட்டுட்டு ஓடிருக்காணுங்க.”என்று சொல்கிறபோது சாபம் விடத் தோன்றுகிறது. “நாசமா போவீங்கடா!”
திரைக்கதையுடன் படத் தொகுப்பாளர் ஆர்.கே. செல்வாவும் இணைந்தே பயணித்திருக்கிறார், கூடவே நானும் வருகிறேன் என்று இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் சேர்ந்து கொள்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் முதுகெலும்பு என்றால் மிகை இல்லை.
கருப்பியின் மரணம் போல கதிரின் சாவும் இருக்காது.எப்படியும் நாயகனை காப்பாற்றி விடுவார்கள் என்கிற வழக்கமான எதிர்பார்ப்பு இந்த படத்திலும் இருக்கிறது.
கதிரும் கொலைகாரப் பாவியும் சேர்ந்தே பள்ளத்தில் சரிவதில் கதிர் மட்டும் மயங்குவது கண்ணைக் கட்டுகிறது.
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பு. இந்த சமூகத்துக்கு என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தாரோ, அதை யாரையும் சாடாமல், இயல்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
அவசியம் பார்க்க வேண்டிய படம்.