செக்கச்சிவந்த வானம் (விமர்சனம்)
இந்தியா முழுவதும் அறியப் பட்டவர் மணிரத்னம். இவரது இயக்கம் என்றால் ஊதியமே இரண்டாம் பட்சம் என நினைக்கிறது நட்சத்திர உலகம். ஸோ ,இவரது படங்கள் எல்லாமே ஹாலிவுட் தரத்தில் வைக்கப்பட வேண்டியவை என்கிற மன நிலையில் மயங்கிக் கிடக்கும் ரசிகர்கள் என்றால் பெரிய இயக்குநர்தானே!
(ஆனால் அந்த பெரிய என்கிற பெருமை தனித்த மணிரத்னத்தினால் பெறப்பட்டது இல்லை. கூட்டு முயற்சி.!)
லைகா என்கிற பெரிய நிறுவனத்தின் தயாரிப்பு. பிரகாஷ்ராஜ் .அரவிந்தசாமி, விஜயசேதுபதி, எஸ்,டி,ஆர் , அருண் விஜய் ,ஜோதிகா, ஜெயசுதா இவை எல்லாவற்றுக்கும் மேலாக சந்தோஷ்சிவன் என்கிற உயரிய ஒளி ஓவியர், ரகுமான் என்கிற இசை இமைப்பாளர் இத்தகைய மல்லர்கள் இணைந்த படம் என்றால் அது ‘பெரிய’ படம்தானே!
தொடர்ந்து சரிவுகளைச் சந்தித்துவரும் மணிரத்னத்துக்கு ‘செக்கச் சிவந்த வானம் ‘ கை கொடுத்திருக்கிறதா, வாரி விட்டிருக்கிறதா?
கமல்ஹாசனுக்கு அனந்து என்கிற மூளை செயல்பட்டதைப் போல மணிக்கு ஒரு கை உதவி செய்திருக்கிறது. சிவானந்த் என்பது பெயர். கேங்க்ஸ்டர் கதையை அதிலும் நான்கு பேர் கொண்ட கதையை கோர்வையாக கொண்டு செல்வது என்பது சாதாரண வேலை இல்லை. ஃபைன் !அருமையான திரைக்கதை.
பிரகாஷ்ராஜ் கேங்க்ஸ்டர் கிங். இவரது மூத்த பிள்ளை அரவிந்தசாமி அப்பாவுடன் இருந்தாலும் தனி ராஜாவாக இல்லையே என்கிற குறை. இரண்டாவது மகன் அருண் விஜய்க்கு துபாயில் கடத்தல் வேலை. மூன்றாவது பிள்ளை சிம்புவுக்கு செர்பியாவில் ஆயுதக் கடத்தல். ஆக, அவரவர் ஊரில் அவரவர் ராஜா.! ஜாலியான வாழ்க்கை.
பிரகாஷ்ராஜ்,மனைவி ஜெயசுதா இருவரும் கோவிலுக்குச் சென்று திரும்புகையில் அவர்களது கார் குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது. உயிருக்கு சேதம் இல்லை.
யார் வைத்திருப்பார்கள்?
மம்பட்டியான் தியாகராஜன் கோஷ்டியா? அல்லது வேறு யாராவதா? இவர்கள் யாரும் இல்லை தனது மகன்களில் யாரோ ஒருவன்தான் போட்டுத்தள்ளப் பார்த்திருக்கிறான் என்கிற சந்தேகம் பிரகாஷ்ராஜுக்கு.!மனைவியிடமும் அதை சொல்கிறார். பின்னர் இயல்பான மரணம் தழுவுகிறார்.
அப்பனின் சாம்ராஜ்யத்துக்கு அதிபதி யார் என்கிற போட்டி நரித்தனமுடன் நடப்பதுதான் இரண்டாம் பாதி. அப்பனுக்கு கொள்ளிவைத்துக் காரியம் நடத்தக்கூட வெளிநாட்டு மகன்கள் வரவில்லை என்றால் சகோதரர்கள் மரண யுத்தம் புரிவதற்கு தயார் என்றுதானே அர்த்தம்.! சூப்பர் காட்சிகள்.
குற்றவாளிகளை கண்டு பிடிக்க போலீஸ் அதிகாரி குடிகார மட்டை விஜயசேதுபதியை போலீஸ் டிபார்ட்மென்ட் எப்படி கையாளுகிறது, அவர் எப்படி கதையுடன் பயணிக்கிறார் என்பதுதான் படத்திலேயே புத்திசாலித்தனமான முடிச்சு,போலீஸ் டிபார்ட் மெண்டின் ராஜதந்திர மூளையை அருமையாக சொல்லி இருக்கிறார்கள்.
இரண்டுமணி சொச்ச நேரத்தில் நம்மை ஆக்கிரமித்துக் கொள்பவர்கள் சிம்புவும், விஜய சேதுபதியும்தான்! மற்றவர்கள் ஆக்டர்கள். இவர்கள் பெர்பார்மார்கள். தியேட்டரில் இவர்களுக்குத்தான் வெறி கலந்த ஆரவாரங்கள். சிம்பு,சேதுபதி இருவரது உரையாடலும் தனிக்கவனம்பெறுகிறது. கிளைமாக்சில் விஜயசேதுபதி முன்னணி ஹீரோக்களுக்கு சவாலாக நிற்கிறார்.
படத்தின் முற்பாதி கேசுவலாக கடக்கிறது. அண்ணன் தம்பிகள் ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ளப்பார்ப்பது இரண்டாம் பாதி.
பிரதர்ஸ் கரமஜோவ், காட் பாதர் ஆகிய ஹாலிவுட் படங்களின் தடங்கள் ஆங்காங்கே பதிந்திருக்கின்றன. ஜோதிகா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஜெயசுதா பக்கபலம் .ஆனாலும் படத்துக்கே பக்க பலம் முதலாவதாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். 1992-ல் இருந்தே மணிக்கு துணையாக நிற்பவர். இவரது ஷாட்கள் ஹாலிவுட்டை நினைவுறுத்துகிற உலகத் தரம் வாய்ந்தவை.அழகியல். அற்புதம்.
ஏ.ஆர் .ரகுமான் .வாழ்க. வேறென்ன சொல்ல முடியும்?
இவ்வளவு சிறப்புகள் இருந்தும் சில இடங்களில் சலிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.