முழுமை பெற்ற காதல் என்றால் முதுமைவரை கூட வரும் என்பதற்கு விஜயசேதுபதி. இளமையின் இந்த ரகசியம் இயற்கையில் வந்த அதிசயம் என்பதற்கு திரிஷா. இந்த இருவருக்கும் பத்தாப்பு படிக்கும்போதே அந்த நிலாவை கையிலே பிடிக்கிற ஆசை. பருவம் அரும்பு விடும் காலம், தடுமாறினால் கவிழ்ந்து விடும் எதிர்காலம்.
பாரதிராஜா,ஸ்ரீ தர்,பாக்யராஜ் ஆகியோர் கைப் பிடித்து கூட்டிச்சென்ற பள்ளிக்கூட காதலை இயக்குநர் சி.பிரேம்குமார் கல்லும் முள்ளும் காலில் குத்திவிடாமல் நடத்திச் சென்றிருக்கிறார். பத்தாப்பு படிக்கிற மாஸ்டர் விஜய்சேதுபதியாக ஆதித்யா ( எம்.எஸ்.பாஸ்கரின் மகன்.) சிறுமி திரிஷாவாக கவுரி இருவரும் பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார்கள்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் செட் எஸ்.எஸ்.எல்.சி மாணவ மாணவிகளை தற்போது சந்தித்தால் எப்படி இருக்கும்?
தஞ்சாவூர் பள்ளி மாணவர்கள் விஜயசேதுபதி ,ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட மாணவர்கள் போடுகிற திட்டம்தான் கதை.
இயக்குநரின் கதை சொல்லும் நேர்த்தி ,ஆதித்யா,கவுரி ஆகியோரின் இயல்பான நடிப்பு, நாலைந்து வரிகள் என்றாலும் இசைஞானியின் பாடல்கள், துணைக்கு நானும் இருக்கிறேன் என இசைஅமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஆகியோரின் பங்களிப்பு சேதப்படுத்தாமல் முற்பாதியை கடத்துகிறது. அதுவரை நமக்கு புகைப்படக் காரராக அறிமுகம் ஆகியிருந்த விஜய்சேதுபதி இடை வெளிக்குப் பிறகுதான் மறுமுகம் காட்டுகிறார் திரிஷாவுடன்! புதிய வேகம் பிடிப்பதும் இரண்டாம் பாதியில்தான்.
பள்ளிப்பருவ காதல் படங்கள் எத்தனையோ வந்திருந்தாலும் அவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது 96.
முகச்சுழிப்புக்கு இடமில்லை. உடல் கவர்ச்சிக்கு அவசியமில்லை. ஆனாலும் காதல் இருக்கிறது. தெய்வீகம்
குளிர்ச்சியை உணரத்தான் முடியும். பார்க்க முடியுமா? இளையராஜாவின் பாடல்களுக்கு மட்டுமே இடம் கொடுக்கிற கதாநாயகியிடம் “யமுனை ஆற்றிலே, ஈரக் காற்றிலே ,கண்ணனோடுதான் ஆட” பாடலை நேயர் விருப்பமாக நாயகன் வைத்தாலும் நாயகிக்கு சிச்சுவேஷன் இடம் கொடுக்கவில்லை. ஆனால் இடைவேளைக்கு பின்னர் பாட கிடைத்த சிச்சுவேஷன் இருக்கே சூப்பர். சின்ன விஜயசேதுபதியாக ஆதித்யா,சின்ன திரிஷாவாக கவுரி இருவரும் குறை வைக்கவில்லை.
இடைவேளைக்குப் பின்னர்தான் விஜயசேதுபதி ,திரிஷாவின் மலரும் நினைவுகள், அதற்கு அவர்கள் தருகிற பதவுரை பொழிப்புரைகள் காதல் சப்ஜெக்டுக்கு பாடமாக வைக்கலாம்.காதலனுக்கு ஹேர் கட்,தாடி கட், ட்ரஸ் சென்ஸ், பின்னிரவு குளிரில் சென்னையின் சாலைகளில்காதலியுடன் தனித்து நடத்தல் இப்படி எத்தனையோ இளமைத் துள்ளல்.
“டே நீ ஆம்பள நாட்டுக்கட்டைடா!உன்ன பிடிக்காமப் போகுமாடா” என திரிஷா சொன்னதும் சேதுபதியின் முகத்தில் டாலடிக்கிறது கர்வமா.பெருமையா? பின்னிட்டேள் போங்கோ! அதிலும் ” நீ இன்னும் வர்ஜினாத்தான் இருக்கியா”? என காதல் புகை வருமளவுக்கு சேதுபதியிடம் வினவுகிற திரிஷாவின் மாடுலேஷன் நளினம். திரிஷாவுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்ததை விஜய் சொல்லும்போது நமக்கும் ஒரு சான்ஸ் வராதா ,காதல் செய்ய என்கிற ஏக்கம் எக்க சக்கம்.
சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவு ,கோவிந்த் வசந்தாவின் இசை, இரண்டும் மெயின் அருவி, தேனருவி.
கண்ணால் நடத்தும் கதை உண்டு என்பார் கவியரசர் கண்ணதாசன்.அதுதான் இந்த 96.
கண்ணுக்கும் காதுக்கும் சுகமோ சுகம்.