சர்க்கார் பட ஆடியோ வெளியீட்டு விழாவினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவர் நடிகர் கருணாகரன்தான்!
டிவிட்டர், பேஸ்புக்கில் விஜய் ரசிகர்களால் வேட்டையாடப்பட்டு வருகிறார்.
தல ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் அடிக்கடி எல்லை தாண்டுவது டிவிட்டரில்தான். அத்து மீறல் இரு தரப்பிலுமே உண்டு. பாகிஸ்தானின் அத்து மீறலை ஐ.நா ,சபை வரை கொண்டு செல்ல முடிகிறது. ஆனால் ரசிகர்களின் அத்து மீறலை சம்பந்தப்பட்ட நடிகர்களாலேயே தீர்க்கமுடிவதில்லை என்பதுதான் மகா சோகம்.
விஜய் அண்மையில் சர்க்கார் படவிழாவில் பேசியதை வைத்து “அந்த சிறுகதை தலைவர்களுக்கு மட்டும்தானா அல்லது உங்களது ரசிகர்களுக்குமா” என்று கருணாகரன் கேட்டு வைக்க மூட்டைப் பூச்சிகள் நிரம்பிய படுக்கையில் படுத்த கதையாகிப் போனது கருணாகரனுக்கு!
“நீ தமிழன் இல்லை. தெலுங்கன்” என்று விஜய் ரசிகர்கள் குற்றம் சொல்ல,”இல்லையில்லை நான் ஆவடிக்காரன்’ என்று கருணாகரன் பதில் சொல்லுமளவுக்கு மாநில எல்லைப் பிரச்னையாகி விட்டது.
இனியும் பிரச்னையை இழுத்துச்செல்ல முடியாது என்கிற நிலைக்கு வந்து விட்டார்கள் விஜய் ரசிகர்கள்.
கருணாகரனுக்கு ‘காலமானார்’ சுவரொட்டி ஒட்டி இறுதி அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.
இந்த அநாகரீகத்துக்கு யார் முடிவு கட்டுவது?