
‘பசுமை வழி சாலை’ என்கிற பெயர் சமீபகாலமாக மக்கள் மனதில் அழுத்தமாக பதிந்த பெயர்.. தற்போது அதே பெயரில் தமிழில் ‘பசுமை வழி சாலை’ என்கிற பெயரில் ஒரு படமே உருவாக்கி வருகிறது. குறிப்பாக சென்னைக்கும் சேலத்திற்கும் இடையே புதிதாக அமையவுள்ள பசுமை வழி சாலையை பின்னணியாக கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்
ளது.இந்தப்படத்தில் கிஷோர், பசுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். சத்துவா புரடக்சன்ஸ் சார்பில் நிருபமா இந்தப்படத்தை தயாரிக்கிறார். சந்தோஷ் கோபால் இயக்கும் இந்தப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தப்படத்தின் சில முக்கியமான காட்சிகளை ஜம்மு காஷ்மீர், லெஹ், லடாக், திபெத், நேபாளம் மற்றும் பூடான் என பல்வேறு இடங்களில் கிட்டத்தட்ட 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி திரும்பியுள்ளனர்.

படத்தின் கதநாயகர்களில் ஒருவரான கிஷோர் மற்றும் படக்குழுவினர் படப்பிடிப்பிற்கான இடங்களை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்தனர்.. அதுமட்டுமல்ல இமயமலை பிரதேசத்தில் மிகவும் தீவிரமான வானிலை நிலவியபோதும் கூட படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். திரையுலகிலேயே கட்டுமஸ்தான உடல்வாகை கொண்ட நடிகர்களில் ஒருவரான கிஷோர் நான்கு டிகிரி குளிர் நிலவிய, மிகவும் சிரமமான பகுதிகளில் கூட படப்பிடிப்பு முழுவதும் தனது மோட்டார்பைக்கை உற்சாகத்துடன் மிகத்திறமையாக ஓட்டி ஆச்சர்யப்படுத்தினார்.
மேலும் இந்த படக்குழுவினர் திபெத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற தஷி லுன்போ மடத்திலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மேலும் உலகத்திலேயே மிக உயரத்தில் வாகனங்கள் செல்லும் சாலைகளை கொண்ட புகழ்பெற்ற கார்டுங்லா மலைப்பகுதியில் இதுவரை படப்பிடிப்பு நடந்திராத இடங்களில் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள லெஹ் நகரத்தில் இந்திய ராணுவ தளத்திற்கு மிக அருகில் படப்பிடிப்பு நடத்த சில சிறப்பு அனுமதிகள் பெற்று, பல பகுதிகளில் வான்வழி காட்சிகளை படமாக்கியுள்ளனர்.