தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வரும் 15ஆம் தேதி நடக்கும் என நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளால் கடந்த ஜூன் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என விஷால், கார்த்தி, நாசர் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். இம் மனு மீதான விசாரணை நடத்திய நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: “நடிகர் சங்கம் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் குழறுபடி நிறைந்ததாகவே உள்ளது. உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தேர்தலில் போட்டியிடுவற்கான தகுதியை உறுப்பினராகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும் என்கிறீர்கள்.ஆனால் மற்றொரு இடத்தில் அதை ஏழு ஆண்டுகள் என்றும், பத்து ஆண்டுகள் என்றும் உள்ளது. வேட்பு மனு தாக்கல் அன்று வாக்காளர் பட்டியல் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு கொடுத்தால், அவர்கள் எப்படி தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியும்.மேலும் மனுதாரர்கள் வாக்காளர் பட்டியலில் சுமார் 700 முதல் 800 வரையில் போலி வாக்காளர்கள் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்த குறைபாடுகளை கலையாமல், சந்தேகங்களுக்கு நிவர்த்தி காணாமல் எப்படி தேர்தல் நடத்த அனுமதிக்க முடியும்.எனவே, இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் கருத்தில் கொண்டுதான் தனி நீதிபதி நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதித்து உள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. ஆகவே, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார்.அதன் பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் சங்கங்களின் பதிவாளரை ஒரு வாதியாக சேர்க்கிறோம். அவர் இந்த கோர்ட்டு எழுப்பியுள்ள கேள்விகளுக்கு இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும். சங்கத்தில் எத்தனை ஆண்டு காலம் உறுப்பினராக உள்ளவர் தேர்தலில் போட்டியிட முடியும் என்று சங்க விதியில் இருப்பதை தெளிவு படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பது குறித்தும், அதை நிவர்த்தி செய்வது குறித்தும் விளக்க வேண்டும். தேர்தல் அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் செயற்குழுவுக்கு உள்ளதா? நிர்வாக குழுவுக்கு உள்ளதா? என்பது பற்றி தெளிவு படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் விளக்கம் அளிக்க ஏதுவாக அடுத்த கட்ட விசாரணையின்போது, சங்கங்களின் பதிவாளர் இந்த கோர்ட்டில் ஆஜராகி உதவிட வேண்டும். வழக்கு விசாரணை இம்மாதம் 28 ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் தீர்ப்பு காரணமாக வரும் 15ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் சங்க நிர்வாகிகள் சார்பில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.