வடசென்னைக்கு ‘ஏ ‘ சர்டிபிகேட் வழங்கி விட்டது.
“கட்ஸ் களுடன் ‘யு.ஏ,’ சர்டிபிகேட் தருகிறோம்” என்று சொன்னதை இயக்குநர் வெற்றிமாறன் ஏற்கவில்லை. தயாரிப்பாளர் தனுஷிடம் சொல்லி “ஏ’ வாங்கவா, ‘யு.ஏ ‘ வாங்கவா ,எதை வாங்க?” என்று கேட்டதற்கு தனுஷின் ஜாய்ஸ் ‘ஏ’.
வாங்கி வந்த கையுடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு
கலகலப்பாகத்தான் நடந்தது.
இயக்குநரைத் தவிர மற்ற அனைவருமே,மனம் விட்டுப் பேசியதாகத்தான் தோன்றியது.
எப்பவோ ஒருவர் சொன்னதுதான் வடசென்னை. அந்த சம்பவத்தை வெற்றி மாறன் மறந்து விடக்கூடும் என நினைத்து அந்த ஒருவர் சிறு தாளில் எழுதியும் கொடுத்திருக்கிறார். அதுதான் ஆயிரம் பக்கங்களில் வடசென்னையாக மாறி இருக்கிறது.
“இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் சிம்புதான். இதை என்னிடம் வெற்றி மாறன் சொன்னபோது தாராளமாக செய்யுங்கள் என்றேன். பின்னர் சில நாட்கள் கழித்து இந்தப்படத்தில் ஒரு கேமியோ ரோல் இருக்கிறது என்று என்னிடம் கேட்டார் வெற்றி மாறன்,!”சார் எனக்கு அந்த அளவுக்கு பெரிய மனசு இல்லை ” என்று சொல்லிவிட்டேன். நானும் மனிதன் தானே.!” என சுருக்கமாக தனுஷ் முன்னுரை எழுதினார்.
“அந்தப்படத்தில் சிம்பு இல்லை என விலகிய பின்னர் அந்த படத்தில் நடிக்கும்படி கேட்டார். ஒருவர் விலகிய பின்னர் அதில் நடிப்பது சரியில்லை. அப்படியே அந்தப் படமும் நின்று போனது. வெற்றிமாறனும் விசாரணை படத்தில் பிசியாகி விட்டார். மீண்டும் அந்த கதை என்னிடமே வந்தது. ஒரே படத்தில் முடிந்து விடக்கூடிய கதை இல்லை. ஆகவே வடசென்னையை மூன்று பாகமாக எடுப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். இந்த படத்தைத் தொடர்ந்து வெற்றி மாறனுடன் வேறு படம் பண்ணுகிறேன். அதன் பின்னர் இரண்டாம் பாகம் ஆரம்பமாகும்” என்றார் தனுஷ்.
“டைரக்டர் ஆகி விட்டீர்கள். ரஜினியை வைத்து டைரக்ட் பண்ணுவீங்களா?”
“நானா வேணாங்கிறேன்?” என சிரிக்கிறார் தனுஷ்.
அது சரி மருமகனுக்கும் மாமனாருக்கும் எவ்வளவோ இருக்கும்!