தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை அரசு விடுதலை செய்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விஜய், வருங்காலத்தில் மீனவர்கள் பயமினிறி தொழில் செய்யும் வகையில், தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தி தர முயற்சி எடுக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களுக்கு வணக்கம்!
தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த எமர்சன், வில்சன், அகஸ்டஸ், பிரசாத், லாங்லெட் ஆகிய ஐந்து மீனவர்களுக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்திருந்தது. மேற்கண்ட மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற தாங்கள் எடுத்த முயற்சிகளும், ராஜ தந்திரங்களும் மிகுந்த பாராட்டுக்குரியது. ஐந்து மீனவர்களின் விடுதலையால், ஐந்து குடும்பங்கள் மட்டும் சந்தோஷமடையவில்லை. ஒட்டுமொத்த தமிழகமே சந்தோஷம் அடைந்துள்ளது.
தினசரி கடலுக்குள் சென்று மீன் கிடைத்தால் மட்டுமே வாழ்க்கை என்று போராடுபவர்கள் மீனபவர்கள். இப்படி தினம் தினம் வாழ்க்கையுடன் போராடும் மீனவர்களுக்கு இப்படி தேவையற்ற தொந்தரவுகள் மேலும் பயத்தையும் அச்சுறுத்தலையும் தரும். இந்த சமூக மக்கள் இனி வருங்காலத்திலாவது பயமின்றி நிம்மதியாக தொழில் செய்ய தகுந்த பாடுகாப்பை ஏற்படுத்தி தர தாங்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று இதன்மூலம் வேண்டுகோள் வைக்கிறேன்.
இவ்வாறு விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.