‘வட்டமிட்டாள் ஆசை வண்ணக்கிளி,
சிக்கிக்கொண்டான் அவள் எண்ணப்படி,
சொன்னது போதும் சந்நிதி தேடி
தூது பேசவா, ஆண் தேவதையே?’
சமுத்திரக்கனி,ரம்யா பாண்டியன். இருவரும் பணியில். இரு குழந்தைகள். அளவான குடும்பம். மனைவியின் எண்ணமெல்லாம் வசதியான வீடு, கணிசமான சம்பளம், கார் வசதி இத்தியாதி இத்தியாதி….இன்னும் சொல்லப்போனால் வாரத்தில் ஒரு நாள் குடிப்பது கூட தவறில்லைஎன்கிற அளவுக்கு புத்திசாலி. கணவர் கனி மீது மரியாதை.காதல் ,உரிமை கொண்டாடுகிற கோபம்.பத்தினி.
மனைவிக்கு நேரெதிர் சமுத்திரக்கனி. ! ஆடம்பர வாழ்க்கையை விட அடக்கமாக கவுரவமுடன் வாழ்கிற வாழ்க்கை. இது போதுமே நமக்கு! எதிர்வரும் காலமும் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் அக்கறை கொண்ட குடும்பத் தலைவன்.
‘என் சம்பாத்தியத்தில்தானே இத்தனை சொகுசு. உன் சம்பாத்தியத்தில் உங்களால் வாழமுடியுமா ‘என வேலை இல்லாத கணவனைப் பார்த்து மனைவி கேட்கிற ஒரு கேள்வி கனியை மாற்றி காட்டுகிறது. தனித்து விடப்பட்ட மனைவியால் நிம்மதியாக வாழ முடிந்ததா, ஒற்றைக் கோழியாக திரிந்த இந்தப் பெண்ணை வட்டமிட்ட பருந்துகளால் வேட்டையாட முடிந்ததா?
அழகாக அழுத்தமாக கொண்டு சென்றிருக்கிறார் கதாசிரியர் இயக்குநர் தாமிரா. கலாச்சார எல்லை தாண்டி விட்ட சமுதாயத்தில் இரண்டு நல்ல உள்ளங்கள் படுகிற துயரங்களை பீம்சிங், கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் பாணியில் ஆபாசமில்லாமல் சொல்லி விட்டார்.
கனிக்கென வார்க்கப்பட்ட பாத்திரம். பிசிறு இல்லாமல் கண்டாமணி போல ஒலிக்கிறது. குட் டச், பேட் டச் என பாலபாடத்தை சொல்லித் தருவதிலிருந்து அந்த பெண் குழந்தையுடன் ஓரிரவு பட்டணத்தின் பல துயரங்களை கடப்பது வரை கரை கடக்காத சமுத்திரம்தான்!
ராதாரவி நல்ல முசல்மான் .உதவிடும் மனம். நன்னெஞ்சே .நல்லோருக்கு மட்டும் இரக்கம் காட்டுவது ஒரு சார்பானது., வழி தவறியவர்க்கும் நல்வழி காட்டு என்பது இறை வழி என வாழ்கிறார்.
கனியின் மனைவியாக ரம்யா பாண்டியன்.ஐ.டி .நிறுவனப்பணி .என்னதான் பார்ட்டி ,பவிசு என்றாலும் தப்பு செய்தவனைத் தண்டிப்பதுதானே நேர்மை நியாயம்.? அதை விடுத்து தண்டித்தவனை நோவது ? “நம்ம பிள்ளையின் பேர்தானே அடிபடும் “என கடிந்து கொள்வது …சரிதானா தாமிரா?
விஜய் மில்டன், ஜிப்ரான் இருவரும் ஆண் தேவதைக்காக அழகாக ஒப்பனை செய்திருக்கிறார்கள்.
பார்க்க வேண்டிய படம்.
சினிமா முரசம் மதிப்பு எண்கள்.3/5