உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரைப்பட த் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தரை அவரது பால்ய நண்பரான விஜய்காந்த் மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு பின்பு அவர் உருக்கமாக எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.
“நண்பா, நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை உடல் நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுயநினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன்.
உன்னை கண்டவுடன் சிறுவயது முதல் நாம் கொண்ட உண்மையான நட்பும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் போராடி நாம் பெற்ற வெற்றி தோல்விகளும் என் கண் முனே வந்து சென்றன.
காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மன கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வர வேண்டும் என்று என் பிரார்த்தனையை கடவுளிடத்திலே வைக்கிறேன். நண்பா மீண்டு வா, எழுந்து வா” என்று தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.
இப்ராகிம் ராவுத்தர். விஜயகாந்த் நடிப்பில் ‘கேப்டன் பிரபாகரன்’, ‘புலன் விசாரணை’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது./