பல படங்களில் கிளைமாக்ஸ் சொதப்பி விடும்.சில படங்களில் சூப்பரோ சூப்பர் என இருக்கும். அப்படித்தான் சண்டக்கோழி 2 படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பும் டாப் டக்கர்..!
நன்றி சொல்லும் நேரத்தில் பானைக்குள் இருந்த நண்டுகள் மூடியை தள்ளிவிட்டு வெளியில் வந்தது போல ” மீ டூ “பற்றிய கேள்வியும்.!
பறவைக்காய்ச்சல் மாதிரி பரவி வரும் பாலியல் வன்முறை தொடர்பான கேள்விகளை தமிழ்த் திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவரும்,நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் சண்டக்கோழி 2 ஹீரோவுமான விஷாலிடம் ……
வீசப்பட்ட முதல் எறி குண்டு.
“மீ டூ ‘பற்றி நீங்கள் எதுவுமே சொல்லலியே? டிவிட்டரில் எதுவும் வரலியே?”
விஷால் திருப்பி எறிந்த பதில் குண்டு.!
“டிவிட்டர் என்ன ஜட்ஜ்மெண்டா? அது ஒரு டெக்னாலஜி டெவலப்மெண்ட்.அவ்வளவுதான்! சினிமா உலகில் நடிகைகள் யாரேனும் அந்த மாதிரியாக பேஸ் பண்ணினால் உடனடியாக சொன்னால் நடவடிக்கை எடுக்க முடியும். ஆறப்போட்டு சொல்லவேண்டாம். தற்போது நடிகர் சங்கம்.பெப்சி.தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஒரு கமிட்டி அமைத்திருக்கிறது. இத்தகைய புகார்களை கவனிப்பதற்கு!”
“சின்மயி பல வருடங்கள் கழித்து வைரமுத்து மீது குற்றம் சாட்டுவதற்கு காரணமே ..அவர் பாதிக்கப்பட்ட காலத்தில் கருணாநிதி முக்கிய பதவியில் இருந்தார். அதனால் பயந்து இருக்கிறார்?”என அடுத்த கேள்வி வீசப்பட்டது.
வந்தது அதே வேகத்தில் பதில்.!
“இதெப்படிங்க….அமலாபாலுக்கு பாலியல் ரீதியாக ஒருவன் தொல்லை கொடுத்தபோது உடனடியாக எனக்கு ‘கால்’ பண்ணினாங்க.
அவனை பிடிச்சு வையுங்க என்றேன் அமலாவிடம்.
பிடிச்சுதான் வச்சிருக்கிறோம் என்றார். உடனே நானும் கார்த்தியும் ஆன் த ஸ்பாட் உடனே சென்று போலீசிடம் ஒப்படைத்து விட்டுத்தான் திரும்பினோம். அதனால் தான் அந்த மாதிரியான சம்பவம் நடந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் சொல்லும்படி சொல்கிறேன். எங்கள் யூனிட்டில் கீர்த்தி,வரலட்சுமி உள்பட எல்லா நடிகைகளும் பாதுகாப்பாகத்தான் இருந்தார்கள்.”
“மீ டூ ‘பற்றி நடிகர் சங்கம் அறிக்கை கூட விடலியே?”
“நடிகர் சங்கம் போலீஸ் ஸ்டேஷன் இல்லிங்க. தப்பாக யாரும் நடந்தால் உடனடியாக சொல்லுங்கள் என்பதை மட்டும் வற்புறுத்தி சொல்கிறேன். “என்றார் விஷால்.
—தேவிமணி