விஜய் நடித்த ‘புலி’ படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அதே சமயம்,அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். தாணு தயாரித்து வருகிறார். ஒரு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் போது, தனது அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதை முடிவு செய்து அதற்கான பணிகளை துவக்குவது விஜய்யின் வழக்கம். இந்நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் 60வது படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்க உள்ளதாகவும் இப்படத்தை ‘தலைவா’ படத்தை தயாரித்த சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.தனது 60வது படமாக இருப்பதால், புதுமையான கதை பண்ண வேண்டும் என்று முடிவெடுத்து எஸ்.ஜே.சூர்யாவை விஜய் தேர்ந்தெடுத்து இருக்கிறார் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.விஜய்யிடம் சொன்ன ஒரு வரிக்கதைக்கு எஸ்.ஜே.சூர்யா திரைக்கதை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.