அன்றாட தங்கம்,வெள்ளி விலை மாதிரி வைரமுத்து, சின்மயி ஆகியோரைப் பற்றிய அலசலும் ஏற்ற தாழ்வுடன் எறியும் இறங்கியும் வருகிறது.
மீ டூ என்கிற ஹேஸ் டாக் சிலருக்கு காஷ் பார்க்கும் தளமாகவும் இருந்து விடுமோ என்கிற பயம் நமக்கு வராமல் இல்லை.
பத்து ஆண்டுகளாக சொல்லப்படாத பாலியல் குற்றச்சாட்டுகளை தற்போது பந்தியில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? வைரமுத்து கவிஞர், சின்மயி பாடகி. சென்னையில் தி.நகரில் திடீரென ஒரு பிள்ளையார் பால் குடித்த கதை பலருக்கு தெரியாமல் இருக்கலாம். மாநகராட்சி காங்.கட்சியைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர்தான் அதன் காரணகர்த்தாவாக இருந்தார். பின்னர் உண்மை வெளிவந்தது, பிள்ளையார் பால் குடிக்கவில்லை என்பதை பத்திரிகைகளே வெளியில் சொன்னது. அதைப் போல வைரமுத்து மீது சின்மயி வைக்கும் குற்றச்சாட்டு நாளை ஒன்று மில்லாமல் போகலாம்.
முதலில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு யாராக இருந்தாலும் ஆதாரம் வைக்கவேண்டும்.
சுசித்ரா என்ற பாடகி முன்னர் திரை உலகைச்சேர்ந்த சிலரின் நெருக்கமுடன் இருப்பதாகச்சொல்லி பல படங்களை வெளியிட்டார். சுஷி லீக்ஸ் என பெயர்.என்ன ஆயிற்று?
அப்போது இந்த சின்மயி இன்டஸ்ட்ரியில்தான் இருந்தார். மீ டூ வுக்காக வைரமுத்து மீது கடுமையாகப் பாய்கிறவர் அன்று என்ன செய்தார்? இவரது நெருக்கமான ஒரு தொகுப்பாளினி மீதும் சுஷி போட்டோ போட்டிருந்தார், அதெல்லாம் காலத்தோடு காலமாக கரைந்து போய்விட்டது.
வைரமுத்து திமுக அனுதாபி, அவர் மீது குற்றம் சாட்டினால் சின்மயி மீது கடும் நடவடிக்கைப் பாயும் .அதனால் திமுக ஆட்சியில் அன்று வாய் மூடிக் கிடந்தார் என்கிறார்கள் சின்மயி ஆதரவாளர்கள்.. ஜெயலலிதா ஆட்சிக் காலம் என ஒன்று இருந்ததையே வசதியாக மறைத்து விட்டார்கள்? உண்மையைச்சொல்லப்போனால் திமுக வினர் மீதும் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கும் என காத்திருந்தது ஜெ.ஆட்சி.
ஆனால் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்து விடக்கூடாது என்பதற்காக அவரது எதிராளிகள் சிலரது குள்ள நரித்தனத்துக்கு சின்மயி கைப்பாவையாகி விட்டார் என்கிறார்கள். புறம் தள்ளிவிட முடியாத குற்றச்சாட்டு.
—-தேவிமணி