Film: Baahubali
Cast: Prabhas, Rana Daggubati, Tamannaah, Anushka Shetty, Nasser, Sathyaraj
Director: SS Rajamouli
Rating: 4/5
சில துரோகிகளால் ( பாகுபலி )அரசன் (பிரபாஸ்) கொல்லப்படுகிறான். அரசன் மகன் என்ற எந்த அடையாளமும் இல்லாமல் மலைப்பகுதியில் சாதாரணமாக வளர்கிறான் இளவரசன் சிவா (மகன் பிரபாஸ்). காதலிக்காக (தமன்னா), அரசன் மனைவியை (அனுஷ்கா) காப்பாற்ற சபதம் எடுக்கும் பிரபாஸ், அனுஷ்கா தான் தன் அம்மா என்பதை தெரிந்து கலங்குகிறான். தான் யார்?தன் வரலாறு என்ன ? என அறிந்துகொள்ளும் சம்பவமும் நிகழ்கிறது. நடந்தது என்ன? என்று காட்சிகளாக விரிவதே ‘பாகுபலி’ யின் திரைக்கதை.{டக்கென நம் மனதில் விரிவது எப்போவோ வந்து போன அடிமைப்பெண் திரைப்படம் தான்}..
‘ஹோ’ வென பேரிரைச்சலுடன் ஆர்பரிக்கும் பிரமாண்ட அருவியின் முன்னால், முதுகில் அம்பு தைத்தநிலையில் குற்றுயிரும் குலையுருமாக கைக்குழந்தையுடன் ரம்யாகிருஷ்ணன் வரும் படத்தின் முதல் காட்சியிலேயே கதைக்குள் நம்மை ஒன்ற வைத்து விடுகிறார் ராஜமௌலி!அருவியில் மூழ்கிய நிலையிலும் தண்ணீருக்கு மேலே குழந்தையை உயர்த்திபிடித்து காப்பாற்றுவதோடு குழந்தையின் பிறப்பு குறித்து மலைப்பகுதியை விரலசைவிலேயே சுட்டிக்காட்டி விட்டு அருவியிலேயே அஸ்தமித்து போகிறார் ரம்யா. சிவகாமி (ரோகினி) என்ற மலைவாசி பெண்ணால் அக் குழந்தை காப்பாற்றப்பட்டு பழங்குடியினரிடையே பலசாலியாக வளரும் (சிவா) பிரபாஸுக்கு தான் யார் என தெரியாது. தெரிந்ததெல்லாம், கடைசி மூச்சில் சிவகாமி கைக்காட்டிச் சென்ற அருவி விழும் பிரமாண்ட மலைதான். இயக்குனர் ராஜமவுலி காட்டியிருக்கும் பிரம்மாண்டம் கதையோடும் காட்சிகளோடும் மிக இயல்பாகப் பொருந்திவிடுவதால் ஆச்சர்யத்தில் நம்மை மூழ்கடித்து இதோ,ஷங்கருக்கு சரியான போட்டி நான் தான் என மார்தட்டியிருக்கிறார் ராஜ்மௌலி. சிவலிங்கத்தை பிரபாஸ் தூக்கிக்கொண்டு போய் அருவியில் வைக்கும் காட்சி அதற்கு சாட்சி! அவ்வளவு பெரிய மலையருவியை பிரபாஸ் ஏறிக்கடக்க முயன்று தோற்பதும், அதன்பின்னர் தமன்னா திரையில் வந்ததும் அவரைப் பின்தொடர்ந்து மலையருவியைக் கடக்கும் காட்சிகள், இயற்கை காட்சிகள் எதனோடும் ஒப்பிடமுடியாத அழகு என்பதால் இன்னும் கவிஞர்கள் அதை உவமைக்கு ஒப்பிட்டு வருகின்றனர். . அந்த இயற்கையை இன்னும் அழகாய் , இன்னும் பேரழகுபடுத்தி, அட!, அதிரப்பள்ளி அருவிதானா இது! விழிகள் விரிய ,ஆச்சர்யமும் ஆனந்தமுமாய் நமக்கு காட்டியிருக்கிறார்கள் ராஜமவுலியும் , ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரும். பிரமாண்ட கோட்டையும் கொத்தளமும் போர்க் கருவிகளும் போர்ப் படைகளும்.. பிரமாண்டமாக நம் கண்முன்னே விரியும் போர்க்களகாட்சிகள் .நாம் பாகுபலியின் காலத்துக்கே போன உணர்வை கொடுக்கிறது.. எங்கும் சிறு பிசிறு கூட தெரியாத அளவுக்கு அத்தனை நேர்த்தியாக காட்சிகளைச் செதுக்கியிருக்கிறார்கள் காட்டெருமையுடன் ராணா மோதும் காட்சி உள்பட, இது கிராபிக்ஸ் காட்சிகள் என சப் டைட்டில் போடும் அளவுக்கு மிக நேர்த்தியாக உருவாகியுள்ளது. தத்ரூபமான ரத்தமும் சதையும் தெறிக்கும் மாபெரும் யுத்தகளம்! தென்னிந்திய திரையுலகம் சார்பில்,உலக படைப்பாளிகளுக்கு சவால் விட்டுள்ளனர்.திறந்தவெளிச்சிறையில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கைதியாக இருக்கும் மன்னரின் மனைவியை(அனுஷ்கா) மீட்கும் போராளிக்கூட்டத்தில் ஒரு போராளியாய் நடித்திருக்கும் தமன்னாவுக்கு இந்தப்படம் நல்ல நடிகை என்ற பெயரை பெற்றுத்தந்துள்ளது.பெண் புலியாய் ஆக்ரோசத்துடன் உறுமும் போதும் சரி!காதல் காட்சிகளில் உருகும் காட்சிகளிலும் சரி அற்புதமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.எம்எம் கீரவாணியின் இசை, படத்தின் காட்சிகளுக்கு உயிரோட்டம் தருகிறது.
ரம்யா கிருஷ்ணனின் கம்பீரமும், சத்யராஜின் நடிப்பும் படத்துக்கு மிகப் பெரிய பலம்.ராஜவிசுவாசியாக வரும் ‘கட்டப்பா’ சத்யராஜ், அட! இதெல்லாம் நமக்கு சாதரணமப்பா என ஊதி தள்ளியிருக்கிறார்., பாகுபலீ….. என்று வேகமாகப் போய் மண்டியிடும் காட்சியிலும் இறுதியில் வருகிற போர்க்காட்சியிலும் சபாஷ் போட வைத்து விடுகிறார்.. ராணாவின் அப்பாவாக நடித்திருக்கும் நாசர், எகத்தாள சிரிப்பிலும் கடுப்புப் பார்வையிலுமே நடித்து தன் பங்கை சிறப்பாக செய்து காட்டியிருக்கிறார். காலகேயனாக நடித்திருக்கும் பிரபாகர், ஒரே காட்சியில் வந்து போகும் சுதீப் ஆகியோர் பொருத்தமான தேர்வு. அரசியாக வருகிற ரம்யாகிருஷ்ணனுக்கு படையப்பாவுக்குப் பிறகு அமைந்திருக்கும் கம்பீரமான வேடம். முகத்திலேயே கம்பீரத்தைக் காட்டுவதோடு , தன்னை துரத்தி வரும் படைவீரர்களை எதிர்கொண்டு கொல்லும் காட்சிகளிலும் ரசிக்கவைத்திருக்கிறார். ராணாவின் நூறடி உயரச்சிலையை நிர்மாணிக்கும் காட்சியும் அதன் பின்னணியில் பிரபாஸ் உருவச்சிலை வருவதும் சிலிர்ப்பு. குறைகள் பல இருந்தாலும் பிராமாண்ட காட்சியமைப்பின் முன் எடுபடாமல் போய் விடுகிறது! மொத்தத்தில் பாகுபலி தென்னிந்திய சினிமாவின் மகுடமாய் ஜொலிக்கிறது! Rating 4/5.