அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளின் மீது சின்மயிக்கே நம்பிக்கை இல்லை என்கிற நிலையில்தான் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். எங்கிருந்தோ ஏவி விட அது அன்றாடம் பழிகளை உதிர்த்துக் கொண்டிருக்கிறது .
இயக்குநர் யுரேகா இயக்கி, நடிகர் ஜெய்வந்த் நடித்து வெளிவந்த ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்ற திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் நலிந்த திரைக்கலைஞர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் உதவிகள் வழங்கும் விழா தேனாம்பேட்டையில் உள்ள உருசியன் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் இராஜன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக கவிப்பேரரசு வைரமுத்து மீதான பாடகி சின்மயி எழுப்பியுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில்,
“சகோதரி சின்மயி விவகாரத்தில் தம்பி சித்தார்த் போன்றவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஸ்ரீரெட்டி என்கிற பெண்மணி, பெயரைக் குறிப்பிட்டு ஒவ்வொருவர் மீதும் பாலியல் புகார் கூறியபோது ஏன் அதுகுறித்து இவர்கள் வாய்திறக்கவில்லை.? சின்மயிக்காகப் பேசுகிற இவர்கள், அந்தப் பெண்ணுக்காக ஏன் பேசவில்லை?
சகோதரி சின்மயி அவர்கள் பிராமணச் சங்கத்தலைவர் ஐயா நாராயணன் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். அதுகுறித்து எவரும் இங்கும் பேசுவதில்லை. எல்லாக் குரல்களும், விரல்களும் வைரமுத்துவை நோக்கி மட்டுமே நீள்கிறதே காரணமென்ன?
இவ்விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள் என்கிறார் சகோதரி சின்மயி. அப்படியானால், இதனைப் பதிவிடுவதன் மூலம் எதனைச் சாதிக்க நினைக்கிறார்? அவரது உள்நோக்கம் வைரமுத்துவை இழிவுப்படுத்தலாம் என்பதைத்தாண்டி வேறென்ன?
15 ஆண்டுகளாக வைரமுத்து மீதானக் குற்றஞ்சாட்டை முன்வைக்காததற்கு, அவருக்கிருந்த அரசியல் செல்வாக்குதான் காரணம் என்கிறார். இப்போது வைரமுத்துவை எதிர்க்கிற அளவுக்கு தனக்கு அரசியல் செல்வாக்கு வந்துவிட்டது எனக் கூறவருகிறாரா?
பெண்களைக் காக்க வேண்டும் என்பதிலும், பெண்ணிய உரிமைகளுக்காக நிற்க வேண்டும் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. விஷால் இதற்காகக் குழு அமைப்பதாகக் கூறுவதை வரவேற்கிறேன்.
இவ்வாறு சீமான் கூறியிருக்கிறார்.