மதுரை, நெல்லை, என அலைந்து கொண்டிருக்கிற கோலிவுட் குஞ்சுகள் வடசென்னை பக்கமாகவும் சுற்றித் திரிந்து கொழுத்த வேட்டையாடி இருக்கிறார்கள்.
அந்தப் பகுதியில் குறிப்பிட்ட ஏரியா மக்கள் மிகவும் தாராளமாக புழங்குகிற கெட்ட வார்த்தைகளை சர்வ சாதாரணமாக சொல்கிறார்கள். அது ஒரு வகையில் கதைக்குப் பலம். அவரவர் தரம், சூழல் ,வாழ்வியல் சார்ந்துதான் வார்த்தைகளும் வரும்.
வடசென்னை யின் ஸ்லாங் தனுஷுக்கு வரும் அளவுக்கு அமீர், சமுத்திரக்கனி, ராதாரவி இன்னும் சிலருக்கு வரவில்லை. மதுரையின் பாதிப்பு,!
‘ங்கோத்தா’ ‘ என்பதை ஐடி ஆளும் சரளமாக பேசுகிறான். . ‘வடசென்னையில் சுற்றும் சின்னப்பையன் கூட “ங்கொம்மாளே “என்பான். ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்கிற வண்டையான வசவுகள் கூட நா கூசும் ரகம்தான்.
ஆனால் ஏரியாவில் அதுதான் அங்கீகரிக்கப்பட்ட “அவர்கள் ” மொழி. கெட்ட வார்த்தைகளுக்கு பதவுரை ,பொழிப்புரையை எல்லாம் அவர்களது சண்டையில் விரிவாக அறிந்து கொள்ள முடியும். எத்தனை நாட்கள் கஷ்டப்பட்டிருப்பாரோ இயக்குநர் வெற்றி மாறன்.
அடுத்தக் கட்டத்துக்கு கோலிவுட் நகர்கிறது என்பது உண்மைதான். பச்சை பச்சையான கெட்ட வார்த்தைகளுக்கு ஹாலிவுட் பழகிப்போனது. பழசாகிப் போனது. பாலிவுட்டில் சற்றே அதற்கு பாலிஷ் போடுகிறார்கள். நாம் இப்போதுதானே வடசென்னையில் பார்க்கிறோம், கேட்கிறோம்., நாளை இந்த கெட்ட வார்த்தைகளுக்கு தனுஷின் பிள்ளைகளும் பழகிப் போயிருப்பார்கள். பரவல்தானே!
மக்களின் பிரதிநிதிகளுக்கு கெட்ட வார்த்தை என்பது ஆயுதம்.
இந்தக் கதையில் அரசியல், பழி வாங்கல், அதிகார எல்லையை தக்க வைத்தல்,கடத்தல், ரத்தம்,சதை, துரோகம் , என எல்லாமே நிறைவாக இருக்கின்றன. ஆனால் படம் பார்த்து விட்டு திரும்புகிறவரிடம் கதையைக் கேட்டால் முக்கியமான காட்சிகளை மட்டுமே அவரால் சொல்ல இயலும்..
கேரக்டர்களின் நீட்சிக்கு தகுந்தவாறு காட்சியின் போக்கு இருக்கிறது.
தனுஷ், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, ராதாரவி, அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி, பவன் என எல்லா கேரக்டர்களும் அவர்களுக்கான பாதையை உணர்ந்து நடந்திருக்கிறார்கள். இந்த மாதிரியான கதைகளில் சில இடங்களை நம்மால் ஊகிக்க முடியும். முந்தைய படங்களின் ஜாடையும் இருக்கும்.
எவரது நடிப்பு சிறப்பு என தீர்மானிக்கமுடியாது. அத்தனை கேரக்டர்களும் அவ்வளவு இயல்பு. ஆனால் இயக்குனரின் தனிக்கவனம் ஹீரோவின் மீதுதான். இருக்கும். அவரை வைத்துத்தானே அத்தனை கிரகமும் சுற்றியாக வேண்டும்!
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் அந்தப் பகுதி மக்களின் கவனமெல்லாம் மூடிய கடைகளைத் திறந்து கொள்ளை அடிப்பதுதான்? அன்புவின் அம்மா கிழவிக்கு வாஷிங் மிசினின் பயன்பாடு தெரியாவிட்டாலும் எதோ ஒரு விதத்தில் பயன் படுத்திக் கொள்ள முடியும் என்பதால்தானே போலீஸ் வந்து கேட்கும்போது திருப்பிக் கொடுக்க மறுக்கிறார்.
ஆனால் எம்.ஜி.ஆர். இறந்து விட்டார் என்பதை அறிந்ததும் அதே மக்களின் மனப்பான்மை எப்படி இருந்திருக்கும் என்பதை இயக்குநரால் பகிரங்கமாக சொல்ல முடியவில்லை.யே. காரணம்?
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ,ஆர்ட் டைரக்டர் ஜாக்கி, இசை சந்தோஷ் நாராயணன், ஸ்டண்ட் திலிப் சுப்பராயன் இவர்களின் கடினமான உழைப்பு கதைக்கு வலுவுடன் முட்டுக் கொடுத்திருக்கிறது..
ஏணியில் தன்னை முன்னே விட்டு பின் தொடர்ந்து தனுஷ் ஏறினால் என்ன நடக்கும் என்பதில் படு எச்சரிக்கை காட்டும் ஐஸ்வர்யா லிப் லாக் காட்சிகளில் கருணை காட்டி இருக்கிறார்.
தனுஷின் ஸ்டிராங்க் ரசிகர்கள் பலம் .டெக்னிஷியன்களின் உழைப்பு, நடிகர்களின் அர்ப்பணிப்பு …படத்துக்கு 3/ 5 மதிப்பெண்கள் கொடுக்கலாம்.