இயக்குநர் லிங்குசாமி, நடிகர் விஷால் சேர்ந்தால் என்ன நடக்குமோ அது நன்றாகவே நடந்திருக்கிறது.கூடவே அனல் அரசு.பேரிடர் பெருவெள்ளமாக திரை கொள்ளா அளவுக்கு ஜனக்கூட்டம்.யார் விட்ட குத்தில் எவர் எங்கே போய் விழுகிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு ஸ்டண்ட் காட்சிகள். யார் கழுத்துக்கோ குறி வைத்து அருவாளை வீசினால் அது நம் கழுத்துக்கு வருவது போன்று சக்திவேலின் ஒளிப்பதிவு. பின்னி இருக்காங்க.
உலகநாயகன் கமல்ஹாசனுக்குத்தான் கடுமையான சவால் காத்திருக்கிறது. தேவர் மகன் 2 எடுக்கப் போவதாக அறிவித்திருக்கிற அவர் , சண்டக்கோழி 2 படத்தைப் பார்த்து விட்டு, அடுத்துக் கதையைப் பற்றி யோசிக்கலாம்.
ஏழு வருஷமாகியும் வேட்டைக் கருப்புசாமிக்கு திருவிழா எடுக்கவில்லை. ஊர் இரண்டு பட்டுக்கிடக்குது. திருவிழா நடந்தால் வெட்டுக் குத்து சாவு என்று ஆகிவிடும். இதற்காகவே ஷ்ரேயா ரெட்டியை பக்காவாக நகல் எடுத்துக் கொண்டு காத்திருக்கிறார் வரலட்சுமி.கணவனை சாகக்கொடுத்தவர்.அத்தனை வருசமாகியும் பழி வாங்குவதற்காக ஆறு வயசு மகனுக்கு முடியும் எடுக்கல.தாலியும் அறுக்கல.
கலெக்டருக்கு படித்திருப்பவனின் கழுத்தை வெட்டாமல் கருப்புசாமிக்கு என்னய்யா விழா வேண்டிக் கிடக்கு என்கிற ஒற்றை வரிக் கதையை டெம்போ குறையாமல் கொண்டுபோகவேண்டும் என்றால் அது லிங்குசாமியால் மட்டுமே முடியும்!
வாத்தியார் மகள் கீர்த்தி சுரேஷ். கல்மிஷம் இல்லாத முகம். பச்சக் என்று மனசுடன் ஒட்டிக் கொள்கிறது.
“டிரைவரா கைக்கு அடக்கமா இருப்பான் . வாங்குற சம்பளத்த அப்படியே கொடுப்பான். டூ வீலர்ல ஜாலியா ஊர சுத்தலாம் “என கீர்த்தி போட்டிருந்த மனக்கணக்கு சோகமாகி வெளிப்படுகிற கட்டம் இருக்கே .அனுபவிக்கனும் சார்!
“என் டூ வீலர்ல வர்றது வரலாறு “என ராஜ்கிரணிடம் கீர்த்தி சொல்வதை ரசிக்காதார் யார்?விஷாலுடன் ஜோடி கட்டுகிற நடிகைகள் எப்படி அவருக்கு வசப்படுகிறார்கள் .ஒட்டிக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் வாத்சாயனரும் ஆச்சரியப்படவேண்டிய காட்சிகள்.!
ராஜ்கிரண் என்றாலே விரோதிகள் உள்பட மொத்த ஊரும் அடங்கி இருக்கும் என்பது அவருக்கென எழுதப்பட்டிருக்கிற சினிமாக்கதை சட்டம். இதிலும் அப்படியே!
ஆர்ட் டைரக்டர் சம்பத்,சேகர் இருவரும் மதுரை சித்திரை திருவிழாவுக்கும் நகல் எடுப்பார்கள் போலிருக்கிறது.பின்னிட்டீங்க மக்களே!
யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை கோவில் குலவைச் சத்தம் மாதிரி! கிராமத்துக் கோவில் திருவிழாக்களில் குலவைச் சத்தம் இல்லை என்றால் அது திருவிழாவே இல்லிங்க.
குடும்பமும் பாசமும் இல்லேன்னா அது லிங்குசாமி படம் இல்லை.
இது நம்ம மார்க்.3/5