சன் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பு சர்கார். இதை எழுதி இயக்கி இருப்பவர் ஏஆர் .முருகதாஸ்.
ஆனால் தனது செங்கோல் கதையைத்தான் முருகதாஸ் சர்கார் படமாக எடுத்திருக்கிறார் என்று எழுத்தாளர் வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் செய்திருக்கிறார்.
செங்கோல் கதையை 2007-லேயே பதிவு செய்திருக்கிறார் வருண் ராஜேந்திரன் .
திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பதைப் போல ஸ்வான் என்கிற எழுத்தாளர் சங்கமே இவருக்கு துணையாகி நின்றது .
சங்கத்தின் தலைவர் இயக்குநர்-தயாரிப்பாளர், நடிகர் கே. பாக்யராஜ்.
“ஒரு தவறு செய்தால்,அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்” என்கிற மக்கள் திலகத்தின் பாடலை தனது காலர் டியூனாக வைத்திருப்பவர் பாக்யராஜ்.
இவரிடம் ஏற்கனவே பலர் சங்கப்பண மோசடியில் சிக்கி மூச்சு முட்டிக்கிடக்கிறார்கள். தற்போது புதிய பஞ்சாயத்து.
எழுத்தாளர் சங்க ( ஸ்வான்.) குழு படித்துப் பார்த்ததில் தெரிந்து கொண்ட கதை இதுதான்.!
“வெளியூரிலிருந்து ஒருவன் ஓட்டுப் போடுவதற்காக ஊருக்கு வருகிறான். யாரோ ஒரு அனாமதேயம் அந்த இளைஞனின் ஓட்டைப் போட்டிருப்பது தெரிகிறது. கோபம் வருமா, வராதா? நிறைய வந்தது. ஆகவே கோர்ட்டுக்குப் போகிறான்.தீர்ப்பு அவனுக்குச் சாதகமாக வருகிறது. இதனால அரசியல் வாதிகளுடன் மோதல் வருகிறது, மறுதேர்தல்.அந்த வாலிபனே தேர்தலுக்கு நிற்கிறான். அவன் வெற்றி பெற்றதும் அரசியல் சூழல் அவனை முதல்வராக அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வருகிறது.அந்த அளவுக்கு மறுதேர்தல் முடிவுகள் அமைந்து விட்டன.”
இதே கதைதான் சர்காரின் கதையும் என்பது வருண் ராஜேந்திரன் வாதம்.
பாக்யராஜ் என்ன சொல்கிறார்.
“வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதை என்ன சொல்கிறதோ அதையே தான் முருகதாசின் கதையும் சொல்கிறது. எழுத்தாளர் சங்கத்தலைவரின் கடமை எதுவோ அதை செய்து வருகிறேன். முருகதாசிடம் தனிப்பட்ட முறையில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளுங்கள் என்கிற விவரத்தைச் சொன்னேன். ‘சிவாஜி சார்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவரது ஓட்டை வேறு ஒருவன் போட்டு விட்டான் என்கிற உண்மையை வைத்துக் கதையைப் பண்ணினேன்னார் .
சிவாஜி சாருக்கு மட்டும் இல்ல எவ்வளவோ பேருக்கு நடந்திருக்கு. ஆனால் ஓட்டுப் போட முடியாமல் போன ஹீரோ கேஸ் போட்டு மறுதேர்தலில் அவனே நிற்பதெல்லாம் பத்து வருசத்துக்கு முன்னாடியே அந்த எழுத்தாளன் பதிவு செய்திருக்கிறானேன்னேன் .
சார் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் .நீங்க அந்த ஆளின் புகாரை பதிவு செய்து கொள்ளுங்கள் என்றார் முருகதாஸ்.
அதற்கு பின்னர்தான் சங்கத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. வருண் ராஜேந்திரனின் பெயரை டைட்டிலில் போடலாம் என்பது எனது ஆலோசனையாக இருந்தது . ஒருத்தன் வருஷக்கணக்கா பத்திரப்படுத்தி வச்சிருந்த கதையை பொசுக்குன்னு அவன் கதை இல்லேன்னு சொல்லிட முடியுமா? சங்கத்தின் முடிவை அந்தப் பையனிடம் சொல்லி விட்டேன். இந்த அளவுக்குத்தான் சங்கம் உதவி செய்யமுடியும் என்பதையும் சொல்லி விட்டேன்.
இதனால் எனக்குத்தான் பிரச்னை. விஜய்யின் அப்பா எஸ்.ஏ ,சந்திரசேகரன் நீண்ட கால நண்பர்.. விஜய்க்கு என் பையன் சாந்தனு பரம ரசிகன், அவர் வந்து தாலி எடுத்துக் கொடுக்கணும்னு சொல்லி தாலி கட்டியவன்.அடுத்து சன்.டிவி. இப்படி பாதிப்புகள் எனக்குத்தான்.!,
எல்லாம் முடிந்து விஜய்யிடம் சொன்னேன் பாவம் அவர் என்ன பண்ணுவார். கோர்ட்டுக்குப் போறேன்னு சொன்னபிறகு நானென்ன சார் சொல்ல முடியும்னுட்டார்.” என்றார் பாக்யராஜ்.
கோர்ட்டுக்குப் போனால் படம் திட்டமிட்டபடி திரைக்கு வருமா?