“இது கலவரப் பகுதி “என போலீஸ் அதிகாரிகள் அறிவிப்பதைப் போல இயக்குநர் நாகராஜ் எனப்படுகிற நாகா தனது படத்தைக் ‘வன்முறைப் பகுதி’என்பதாக அறிவித்திருக்கிறார்.
கதைக்களம் தெக்கித்தி சீமை. தேனி ஏரியா.
கத்திக்குத்தும் படுகொலையும் இனத் துரோகமும் மாறாது வளர்ந்து நிற்கிற ஊர்.
அண்ணனை வெட்டிச்சாய்த்த தம்பி .
ஜெயிலில் இருந்து திரும்பியதும் அண்ணன் குடும்பத்துடன் நேசம் காட்டி நாசம் செய்யும் தம்பி.
வேலை வெட்டி என எதுவும் இல்லாமல் வெட்டியாய் திரிந்து முறைப்பெண்ணையே கற்பழித்து வாழ்கிற முரடன், மூர்க்கன். இவன்தான் கதாநாயகன் முனியசாமி.(மணிகண்டன்.)
பிஎஸ்சி.கிராமத்து பண்பாடு என அடக்கமுடன் கதாநாயகி தவமணி.(ரஃபியா ஜாபர்.).”கருப்பா இருந்தாலும் களையாத்தானே இருக்கே”என காதலில் விழுந்து விட்டவள் .
“உள்ளூரில் பெண் கொடுக்காவிட்டால் என்ன அசலூரில் பெண் எடுக்கிறேன்” என வஞ்சினம் கொண்டு வாழ்கிற சின்னத்தாயி.( திண்டுக்கல் தனம்.)
இப்படி ஒவ்வொரு கேரக்டரையும் இயல்பாக செதுக்கிஇருக்கிறார் இயக்குநர் நாகா. சிநேகிதம்,துரோகம் இரண்டையும் எந்த இடத்திலும் வலு இழக்க செய்யாமல் நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார். மற்ற படங்களைப் போல ஹீரோவுக்கு எந்த போதி மரத்தையும் காட்டவில்லை. அவனை தியாகியாகவும் மாற்றவில்லை. ஒழிந்தான் ரவுடி என்கிற நிம்மதியைத்தான் தருகிறது.அந்த அளவுக்கு கதைக்குள் அமர்ந்து விடுகிறோம்.
கிராமத்துடன் ஒன்றிவிட்ட டி.மகேஷின் ஒளிப்பதிவு இயக்குநருடன் சேர்ந்து கொள்கிறது. களத்துக்கு நாகா புதிசு என்பதால் திரைக்கதையில் அவர் பல இடங்களில் வழுக்கி இருக்கிறார்.
மணிகண்டனின் நடிப்பு குறை சொல்லும்படியாக இல்லை. சீற்றம் இருக்கிறது .சிறப்பாகவே இருக்கிறது.
பணப் பற்றாக்குறை என்பது படத்தின் மீது விழுந்துள்ள கனமான பாரம். எடிட்டர் அனந்த குமார் சற்று தாராளமாகவே வெட்டித் தள்ளியிருக்கலாம். சசிகுமார்.சமுத்திரக்கனி ஆகியோரை கதைப் பாத்திரங்களுடன் பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
படத்தின் டைட்டிலில் ஈர்ப்பு இல்லை என்பது மிகவும் கடுமையான பலவீனம்.
இயல்பான படம்.