MAARI. Production: Magic Frames, Wunderbar Films
Cast: Dhanush, Kajal Aggarwal, Robot Shankar
Direction: Balaji Mohan
Music: Anirudh
Cinematography: Om Prakash
Art direction: Vijay Murugan. Rating:2/5
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு ஏரியாவில் மாமூல் வசூல், கட்டப்பஞ்சாயத்து, புறா பந்தயம், அடிதடி என அந்த ஏரியாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் மாரி (தனுஷ்). இவருக்கு செம்மரக்கட்டை கடத்தல் தாதா சண்முக ராஜனின் ஆதரவு வேறு! மாரி செய்யும் அத்தனை வேலைகளையும் தானும் செய்து ஏரியாவில்பெரிய தாதாவாக வேண்டும் என நினைப்பவர் ‘பேர்டு’ ரவி (மைம் கோபி). இதனால் அடிக்கடி மாரிக்கும், ‘பேர்டு’ ரவிக்கும் தகராறு ஏற்படுகிறது. மாரியிடமிருந்து ஏரியாவைக் கைப்பற்ற லோக்கல் கோஷ்டி சரியான நேரத்துக்காக காத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் திருவல்லிக்கேணி ஸ்டேஷனுக்கு எஸ்.ஐ.யாக வருகிறார் அர்ஜுன் (விஜய் யேசுதாஸ்). எஸ்.ஐ. அவரை தன் பக்கம் சேர்த்துக்கொண்டு மாரி இடத்தை பிடிக்க திட்டமிடுகிறார் பேர்டு ரவி. இந்நிலையில் அந்தப் பகுதிக்கு புதிதாகக் குடிவரும் காஜல் அகர்வாலைப் பயன்படுத்தி, ஒரு கொலை வழக்கில் மாரியை உள்ளே தள்ளுகிறார் எஸ்.ஐ. தனுஷ் ஜெயிலுக்குள் போனதை கண்டு அந்த ஏரியாவே பட்டாசு வெடித்து கொண்டாடுகிறது. அதன் பிறகு எல்லாமே தலைகீழாகிறது. எதிர்கோஷ்டி ஏரியாவை எடுத்துக் கொள்கிறது. ஏழுமாத சிறை வாசத்துக்குப் பிறகு வெளியில் வரும் மாரி, எப்படி ஏரியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்! தனுஷ் நல்லவனா? கெட்டவனா? என்பது காஜல் மற்றும் அந்த ஏரியா மக்களுக்கு புரிந்ததா? நட்புடன் பழகிய காஜல் தனுஷை போலீசில் மாட்டிவிட காரணம் என்ன? விடுதலையாகி வரும் ‘மாரி’ இவர்களின் சதி திட்டங்களை எப்படி முறியடிக்கிறார்? என்பது மீதிக்கதை. படம் முழுக்க கழுத்து நிறைய தங்க சங்கிலியுடனும், வேஷ்டி, கலர் சட்டையுடனும், தாதாவாக வலம் வரும் .தனுஷ். தன எதிரிகளை ‘செஞ்சுருவேன்.’. என்று சொல்லும் விதம் ரசிக்க வைக்கிறது. காஜல் அகர்வால் வருகிறார் போகிறார்.காஜல், படத்தில் ஒரு பேஷன் டிசைனராக அழகாக வலம் வந்திருக்கிறார். ஆனால் படத்தில் காதலுக்கும் வேலையில்லை. காஜலுக்கும் வேலையில்லை.. ஒரே மாதிரியான முக பாவங்கள் அவரது முந்தைய படங்களையே ஞாபக படுத்துகிறது. ரோபோ ஷங்கருக்கு இதில் பெரிய வேடம். சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். அடிதாங்கியாக வரும் வினோத், ‘பேர்டு’ ரவியாக வரும் மைம் கோபி, கான்ஸ்டபிள் காளி வெங்கட் ,சண்முகராஜன், ஸ்ரீரஞ்சனி ஆகிய அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வில்லன் வேடத்தில் அறிமுகமாகியிருக்கும் விஜய் யேசுதாஸுக்கு, ஒரு நடிகருக்குரிய உடல் மொழி எளிதில் வருகிறது. தமிழ் சினிமாவுக்கு இன்னொரு வில்லன் தயார். அதே சமயம் ஒரு எஸ்.ஐ. இவ்வளவு வெளிப்படையாகவா செயல்படுவார்!. அது சாத்தியமும் இல்லை.அடிப்படை தெரியாமல் உருவாக்கப்பட்டுள்ள கேரக்டர் என்பதால் மொத்தப் படமும் சொதப்பலாய் தோன்றுகிறது, அனிருத்தின் இசையில் பாடல்கள் கேட்கும்போது ரசிக்கும்படி இருந்தாலும், வெளியில் வந்ததுமே மறந்து போகிற ரகம்.. பின்னணி இசை கொஞ்சம் கூட பொருந்தவில்லை. படம் ஆரம்பித்ததிலிருந்து ‘புறா பந்தயம்… புறா பந்தயம்’ என ஆளாளுக்கு பில்டப் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால், கடைசி வரை ம்கூம்…!. ஓம் பிரகாஷின் காமிராவில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் அனல் பறக்கிறது. நிஜ திருவல்லிக்கேணியா செட்டா என்பது தெரியாமல் படமாக்கியுள்ளனர். தனுஷ் கேரக்டரை மட்டுமே கவனத்தில் கொண்ட பாலாஜி மோகன், கதாநாயகி காஜல் மற்றும் மெயின் வில்லன் விஜய் யேசு தாஸ் என இருவர் கேரக்டர்களிலும் கோட்டை விட்டிருக்கிறார். மொத்தத்தில் இந்த’ மாரி’ ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தையே தந்திருக்கிறார். rating2/5.