96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது,
![](https://cinemamurasam.com/wp-content/uploads/2018/11/7.jpg)
படம் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்து விச்சு என்பவர் சமூக வலைதளம் ஒன்றில், ‘இந்த கதை என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார். அதனையடுத்து சுரேஷ் என்பவர் இந்த கதை என்னுடையது என்றும், இயக்குநர் மருது பாண்டியன் என்பவரிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறேன் என்றும், அவர் தான் இந்த கதையை இயக்குநர் பிரேம்குமாரிடம் சொல்லி படமாகியிருக்கிறது என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
ஒரே கதையை எப்படி இரண்டு பேரிடமிருந்து திருட முடியும்?
![](https://cinemamurasam.com/wp-content/uploads/2018/11/1-e1541080921189.jpg)
இந்த கதையை முதல் முறையாக என்னுடைய குறிப்பேட்டிலும், இரண்டாவது முறையாக என்னுடைய கைப்பட எழுதி பைண்டிங் செய்யப்பட்ட ஃபைலும் உள்ளன. இதன் பின்னர் தான் இந்த கதையைப் பற்றி அவரிடம் கூறினேன். இந்த கதையைக் கேட்டவுடன் அவர் ஏற்கனவே சுரேஷ் என்பவர் இதே பாணியில் 92 என்ற டைட்டிலில கதையை கேட்டதாகச் சொல்லவேயில்லை. கதை விவாத்தின் போது அவர் உடனிருந்தார். அப்போதும் சொல்லவில்லை. அவர் கதையை திருடியிருந்தால், அந்த கதையை அவரே இயக்கியிருக்கலாமே.. ஏன் மற்றொரு இயக்குநரிடம் கொடுத்து இயக்கசொல்லவேண்டும்?
இந்த படத்தில் கதையின் நாயகியின் பெயர் ஜானகி என்பதும், கதைக் களம் தஞ்சாவூர் என்பதும், பள்ளிப்பருவத்து காதலைத்தான் இதிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குற்றச்சாட்டு அல்ல. கதையை திருடியவர் கதையின் நாயகி பெயரை மாற்றியிருக்கலாம், கதை களத்தின் இடத்தை மாற்றியிருக்கலாம் .. இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும் போது, இந்த படத்தில் அப்படியே பயன்படுத்துவார்களா,,?
இது போன்ற பிரச்சினைகளை பேசி தீர்க்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் என்றொரு சங்கம் இருக்கிறது. அதற்கு இயக்குநர் கே பாக்யராஜ் தலைவராக இருக்கிறார். அங்கு வைத்து பேசியிருக்கலாம் அல்லது நீதிமன்றம் இருக்கிறது. அங்கு முறையாக போதிய ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்திருககலாம். இதையெல்லாம் விடுத்து மாற்று பாதையை தேர்ந்தெடுத்து, படைப்பாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா?இது தொடர்பாக சுரேஷ் என்பவர் 2012 ஆம் ஆண்டில் மின்னஞ்சல் அனுப்பியதாக தெரிவித்திருக்கிறார். தொழில்நுட்ப குழுவினரின் உதவியுடன் அத்தகைய ஆதாரங்கள் அவர்கள் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
![](https://cinemamurasam.com/wp-content/uploads/2018/11/10-e1541081012746.jpg)