தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், விஜயகாந்தின் நண்பருமான இப்ராஹிம் ராவுத்தர் (வயது 64.) இன்று காலை பதினோரு மணியளவில் மரணமடைந்தார்..’பரதன்’, ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’, ’என் ஆசை மச்சான் ’உள்ளிட்ட பல படங்களை தன் ராவுத்தர் பிலிம்ஸ் மூலம் தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர்.விஜயகாந்தின் பால்ய கால நண்பர் ராவுத்தர். விஜயகாந்த் நாயகனாக வலம் வர ஆரம்பித்த உடன், விஜயகாந்தின் நிழலாக பல ஆண்டுகளாக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேற்றுமை காரணமாகஇருவரும் பிரிந்தனர்.கடந்த சில மாதங்களாகவே இருதய கோளாறு ,சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இப்ராகிம் ராவுத்தர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவ மனை ஒன்றில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உறவினர்கள் அவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டு இருந்தனர்.இந்நிலையில் கடந்த இருநாட்களாக உடல்நிலை மேலும் மோசடைந்தது. இதையடுத்து,, இன்று காலை சிகிச்சை பலனின்றி இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்.இப்ராஹிம் ராவுத்தர் திருமணம் ஆகாதவர். தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 முறை துணைத் தலைவராகவும், ஒரு முறை தலைவராகவும் இருந்துள்ளார். அவரது உடல் பொது மக்கள் பார்வைக்காக வடபழனியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை பகல் 12 மணிக்கு ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு சாலிகிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.அவரது உடலுக்கு அவரது நண்பரும் தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த்,அவரது மனைவி பிரேமலதா,மகன்கள் விஜய பிரபாகரன்,சண்முக பாண்டியன் மைத்துனர் சுதீஸ் ஆகியோருடன் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். கருணாஸ்,அருண்பாண்டியன் லியாகத் அலிகான் மற்றும் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த அனைத்து சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவையொட்டி நாளை ஒருநாள் அனைத்து படபிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.