“எனக்கு போட்டி விதார்த்.!”–ஜோதிகா

602
SHARES
3.3k
VIEWS

You might also like

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா,விதார்த்,லட்சுமி மஞ்சு உட்பட பலர் நடித்திருக்கும் காற்றின் மொழி
நவம்பர் 16 அன்று வெளியாகவிருக்கிறது. அதையொட்டி படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது.

இதில், ஜோதிகா, விதார்த், லட்சுமிமஞ்சு, இயக்குநர் ராதாமோகன்,வசனகர்த்தா பொன்.பார்த்திபன், நடன இயக்குநர் விஜிசதீஷ், ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்துசாமி, இசையமைப்பாளர் காஷிப், நடிகர்கள் மனோபாலா,எம்.எஸ்.பாஸ்கர், மாஸ்டர் தேஜஸ், குமரவேல், ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகை லட்சுமி மஞ்சு பேசும்போது…

இந்தப் படத்தில் நடிப்பதைப் பற்றிக் கேட்டால் என்னால் கூற முடியாது. நடித்த அனுபவமே இல்லாமல் முழுக்க முழுக்க வேடிக்கையாகத் தான் இருந்தது.நான் ஜோதிகாவின் மிகப் பெரிய ரசிகை. இருப்பினும், ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்து எனக்குப் பொறாமையாக இருக்கிறது. இப்படத்தில் என்னைத் தவிர யாரும் நன்றாக இருந்திருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு என்னுடைய கதாபாத்திரம் நன்றாக அமைந்திருக்கும். தமிழ்ப் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் வளர்ந்தது இங்கு தான், எனவே தொடர்ந்து இங்கே நடிக்க ஆசை என்றார்.

நாயகன் விதார்த் பேசும்போது…

தனஞ்செயன் என்னிடம் ராததாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கிறார். உங்களுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது நடிக்கிறீர்களா? என்று கேட்டார். ராதாமோகன் இயக்கத்தில் நடிப்பதற்கு கனவோடு இருந்தேன். அதேபோல என் அம்மாவிற்கும், மனைவிக்கும் பிடித்த நடிகை ஜோதிகா. ஆகையால் உடனே ஒப்புக் கொண்டேன்.

ஆனால், ராதாமோகன் என் கதாபாத்திரத்தைக் கூறும்போதே ஏன் நான் ஒப்புக் கொண்டேன் என்று பயந்தேன். அந்தளவுக்கு என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்றார்.

மேலும், குமரவேலிடம் ராதாமோகனைப் பற்றி கேட்டேன், அவர் எப்படிப்பட்டவர்? கோபப்படுவாரா? என்று கேட்டேன். அப்படியெல்லாம் கிடையாது என்று அவர் கூறினார். இருந்தும் கொஞ்சம் பயத்துடனே படப்பிடிப்பிற்கு சென்றேன்.

அங்கு ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்ததும் எனக்கிருந்த பயம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. அவருக்கு ஈடுகொடுத்து எப்படி நடிப்பது என்று யோசித்தேன். இப்படி ஒரு நடிகையை நான் பார்த்ததேயில்லை. ஆனால் முதல் ‘டேக்’ கிலேயே சரியாக வந்தது.

அதேபோல படப்பிடிப்பைத் தவிர்த்து ஜோதிகா எப்படிப் பழகுவார்? என்று சந்தேகம் இருந்தது. ஆனால், அவரோ என்னை ‘ஜோ’ என்றே கூப்பிடுங்கள் என்று மிகவும் எளிமையாகப் பழகினார். இந்தப் படத்தில் நான் நன்றாக நடித்தேன் என்றால் அதற்கு ஜோதிகா தான் காரணம். ஜோதிகாவிற்கு இப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது…

BOFTA -வில் இருக்கும் மாணவர்களுக்கு இந்தப் படத்தை உதாரணமாகக் கூறுவேன். ஏனென்றால், இயக்குநர், நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தயாராக இருந்தால்தான் ஒரு படம் இவ்வளவு வேகமாகவும், இடைவெளி இல்லாமலும் குறுகிய காலத்தில் உருவாக முடியும்.

அதிலும் ஜோதிகாவிடம் நடிக்கக் கேட்கும்போதே அவர் உடனே ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல் படப்பிடிப்புக்கான தேதிகளையும் தாராளமாகக் கொடுத்தார். அதேபோல அனைத்துக் காட்சிகளையும் ஒரே ‘டேக்’கில் நடித்து முடித்துவிட்டார்.
மேலும், இந்த படம் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டதல்ல. குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என்றார்.

இறுதியாக ஜோதிகா பேசும்போது…

ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்தப் படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது.

‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சியும் நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.

லட்சுமி மஞ்சு கூறியது போலவே, இந்தப் படத்தில் நடித்த அனுபவமே இல்லை. கமல் நடிக்கும்போது தான் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அதேபோல எம்.எஸ்.பாஸ்கரையும் வியந்து பார்த்தேன். ஒரே ‘டேக்’கில் நடித்துவிடுவார். கிளிசரின் இல்லாமலே அழுவார்.

விதார்த் பயப்பட்டதாகச் சொன்னதெல்லாம் சும்மா. எனக்குப் போட்டியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

மனோபாலாவுடன் நடிக்கும் காட்சிகளில் சிரித்து சிரித்து வயிறு வலியே எடுத்தது.

குமரவேல் மிகவும் இயல்பாக நடிப்பார்.

தேஜஸ் உடனான காட்சிகளில் மிகவும் ரசித்து நடித்தேன். குழந்தைகள் என்றாலே மொபைல் போனில் விளையாடுவார்கள். ஆனால் தேஜஸ் ஒருமுறை கூட விளையாடி நான் பார்த்ததே இல்லை. எல்லோருடனும் பேசிக் கொண்டிருப்பான். பிறந்த நாள் என்றாலே SMS மூலம் வாழ்த்து தெரிவிக்கும் இந்த காலத்தில், எல்லோருடனும் இணைந்து பேசுவான். இவனைப் பார்த்த பிறகு என் பிள்ளைகளுக்கும் இவற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

என் அம்மாவும், நான் அம்மாவாக அழைக்கும் என் மாமியாரையும் தான் நான் முன்மாதிரியாகக் கருதுவேன். என் மாமா சிவகுமார் என்னுடைய எல்லாப் படங்களையும் திரை அரங்கத்திற்கு சென்று தான் பார்ப்பார். நான் நடித்த எல்லாப் படங்களுமே அவருக்கு பிடிக்கும்.

இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்தக் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

நான் நிறைய கதாநாயகர்களுடன் நடித்திருக்கிறேன். சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுக்குப் பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக இருந்தது.

இந்தப்படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் குடும்பத்துடன் பாருங்கள் என்றார்

Related Posts

Recent News

Actress

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?