வறுத்து எடுத்திருக்கிறார்கள் இன்றைய அரசியல் வாதிகளை.!
விஜய்யின் அரசியல் முதல் எதிரி யார் என்பதை முகத்தில் அறைந்து சொல்லிஇருக்கிறார்கள்..
கோமளவல்லி என்றால் யார் எனத் தெரியாதவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஒரு கட்டத்தில் “நான் கார்ப்பரேட் கிரிமினல் என்றால் நீ கருவிலேயே கிரிமினல் “என கோமளவல்லியாக வருகிற வரலட்சுமிசரத்குமாரை பார்த்து விஜய் ஏளனமாக சொல்வார். அந்த கோமளவல்லி தனது அப்பாவை (முதல்வர்.) கொலை செய்தவர் என்பதை சொல்லி இருப்பதிலும் அரசியல் இல்லாமல் இல்லை.!
தமிழக அரசியல் படித்தவர்களுக்கு வில்லன் பாத்திரங்கள் யாரை சுட்டிக்காட்டுகின்றன என்பது சுலபத்தில் புரிந்து விடும்.
கதையில் அரசியல் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது. இரும்பு உலையில் இருந்து வசனங்களை வார்த்து எடுத்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். வயிற்றில் குத்தி முதுகு பக்கமாக வெளியேறுகிறது. இதனால் காட்சிகளில் மனம் பதியவில்லை.கை தட்டவைக்கிற வசனங்கள்.!
கதை என்ன ? சுந்தர்பிச்சையைப் போல இந்த சுந்தரும் . அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனத்தின் ஜெகஜால கில்லாடி! கார்ப்பரேட் கிரிமினல்.
ஓட்டுப் போடுவதற்காக சென்னைக்கு வருகிறார் லட்சங்களை செலவழித்துக் கொண்டு.!
வந்தவருக்கு அதிர்ச்சி !
உலகப் புகழ் வாய்ந்த அவரது ஓட்டை பக்கா லோக்கல் பரட்டை யோகிபாபு போட்டுவிடுகிறார். இங்கிருந்து ஆரம்பமாகிறது விஜய்யின் திருவிளையாடல். முதல்வர் பழ.கருப்பையா,நம்பர் ரெண்டு ராதாரவி, இருவருக்கும்அராஜக ஐடியா கொடுக்கிற வரலட்சுமி சரத்குமார், ஆகிய மும்முனை மோசடி மன்னர்களை எதிர்த்து வழக்கு, வம்பு, என கதை கடக்கிறது.
ஆக காதலுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தேவைப்படாத கதையில் கீர்த்திக்கு டான்ஸ் சமாச்சாரம்தான் கை கொடுக்கிறது. கதாநாயகனுடன் வருகிறார்.போகிறார், சில இடங்களில் முணுமுணுப்பு.தட்ஸ் ஆல். வரலட்சுமி ஸ்கோர் பண்ணியிருக்கிற அளவுக்குக் கூட கீர்த்தியினால் கெத்துக் காட்ட முடியவில்லை.
படத்தின் பெரும்பாரத்தையும் சுமப்பவர் விஜய். ‘டைம் டு லீட்’ போட்டதற்காக அவர் பட்ட காயங்களும் வடுக்களும் உறுத்திக் கொண்டே இருந்திருக்கும் போலும்.. இந்த படத்தில் ‘அவர்களை’ வச்சு செய்திருக்கிறார், நடிப்பில் பல இடங்களில் புதிய தோரணை. ஸ்டைல் காட்டியே ரசிகர்களை கவர்கிறார்.
வாசித்த செய்திதான் என்றாலும் கந்து வட்டி கொடுமைக்காக கலெக்டர் ஆபீஸ் முன்பாக தீ குளித்த சம்பவத்தை படமாக்கி இருக்கிற விதம் கண்களை நனைக்கிறது.
கோமளவல்லியின் திமிர்த்தனம் அராஜக சிந்தனை, பழி வாங்கும் குணம் எல்லாமே வரலட்சுமியின் ஆணவ நடிப்புக்கு சரியான தீனியாக அமைந்திருக்கிறது.
பழ.கருப்பையா கட்சிக்குத் தலைவர் ,ஆட்சிக்கு முதல்வர். பல கட்சிகளில் பயணித்தவர் என்பதால் அவர்களை அவரது முகத்தில் காட்ட முடிகிறது. தேர்ந்த நடிகர்!
நம்பர் டூ என்றாலே டம்மியாகத்தான் இருக்க முடியும், இது அரசியல் உலகின் எழுதப்படாத சட்டம் என்பதை ராதா ரவியின் வழியாக காட்டி இருக்கிறார் இயக்குநர். ஒரு பக்கா வில்லனை பதுங்கு குழியிலேயே வைத்து இருக்கிறார்கள். பட் அந்த கேரக்டருக்கு அந்த அளவுக்குத் தான் மூக்கின் நீளம் தேவை.எல்லாம் அரசியல்தான்!
பத்திரிகையாளர்களை ஒரு பிடி, டுவிட்டர்,வாட்ஸ் அப்புகளை ஒரு பிடி என சாத்தியிருக்கிறார் வசனகர்த்தா.
அரசியல் பேசுகிற படத்துக்கு ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், ஆர்ட் டைரக்டர் டி.சந்தானம் படாதபாடு பட்டு ஈடுபாடு காட்டி இருக்கிறார்கள்.அடடே அசரவைத்திருக்கிறார்கள்
முதல்பாதி செமையாக மூவ் ஆன கதை இடைவேளைக்குப் பின்னர் ஜவ்வடிக்கிறது. ஸ்ரீ கர் பிரகாஷ் ஒரு பாடலையே கட் பண்ணி இருக்கலாம் .
‘கண்ட’வார்த்தைகளையும் போட்டு இட்டுக்கட்டி எழுதி இருந்தாலும் அவற்றுக்கு ஜீவன் ரகுமானின் மெட்டுகள். சிமிட்டாங்காரன் படமாக்கப்பட்ட விதம் பரவசம்.
விஜய்யின் அரசியலுக்கு சர்கார் பெரிதும் பயன்படும். இந்த படத்துக்கு உரிமை கொண்டாடிய வருணுக்கு நன்றி சொல்லி கார்டு போடுகிறார்கள். பாராட்டவேண்டும்.
சர்கார் 2.5/5