தீபாவளி வெளியீடான சர்க்கார் படத்தில் கதைப்படி ஆளும் கட்சியை கடுமையாகவே சாடி இருந்தார்கள். அது கற்பனையோ, நாட்டு நடப்போ,எதுவோ ?ஆளும் கட்சியை சுரண்டி விட்டிருக்கிறது என்பது உண்மை.
திமுக, அதிமுக அரசின் இலவசங்களை கண்டித்துக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கலைஞர் ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச டிவி திட்டத்தையும் தீயிட்டுப் பொசுக்கி இருந்தார்கள். அந்த புண்ணியத்தை படத்தின் இயக்குநர் முருகதாஸே செய்திருந்தார்.அவரே குட்டியான டிவி பெட்டியை தீயில் போடுவார். நம்பர் 1,நம்பர் 2 என முதல்வரையும் மற்றவரையும் காட்டி இருந்தார்கள். அதுமட்டுமல்ல கோமளவல்லி என்பது வரலட்சுமி கேரக்டருக்குப் பெயர்.
இதெல்லாம் நிஜ அரசியல் என்கிறார்கள் ஆட்சியாளர்கள்.!
சினிமாக்காரர்கள் தொடர்பான துறையை வைத்திருக்கிற அமைச்சர் கடம்பூர் ராசு ரொம்பவே எரிச்சலாகி இருக்கிறார் என்பது அவரது உறுமலில் தெரிந்தது.
“இந்த மாதிரியான படங்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். ஆனாலும் இதைப் பற்றி முதல்வரிடம் பேசப்போகிறேன்.சில காட்சிகளை நீக்கி விட்டால் நல்லது.நீக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை பாயும்.!”என்று மிரட்டி இருக்கிறார். மத்திய அரசும் தணிக்கைக் குழுவும் அனுமதித்த அந்த காட்சிகளை வெட்ட மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்றாலும் அமைச்சர் வெட்ட சொல்கிற காட்சிகள் எவை எவை என்பதையும் சொல்லி இருக்கலாமே!
கடம்பூர் ராசுவை அடுத்து சட்டத்துறை அமைச்சர் சண்முகம் சகட்டு மேனிக்கு தயாரிப்பாளர்கள், நடிகர்கள்,கதாசிரியர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விட்டிருக்கிறார். !
” பொருத்தமான பிரிவுகளின்படி நடவடிக்கை பாயும்”
“அரசை விமர்சிக்க உரிமை இருக்கிறது என்பதற்காக வன்முறையை தூண்டிவிடும் அளவுக்கு காட்சிகள் இருந்தால் அது கடும் குற்றம்! நான் விஜய்யை மட்டும் சொல்லவில்லை “என்பதாகவும் சொல்லி இருக்கிறார்.
ஆனால் சர்க்கார் பட வசூல் இரண்டே நாளில் 100 கோடியைத் தொட்டு இருக்கிறது. முதல் நாளில் உலக அளவில் 67 கோடி. இரண்டாவது நாளில் குறைந்திருந்தாலும் நூறு கோடியை தொட்டு விட்டது ,தமிழ்நாட்டில் இரண்டு நாளில் ஐம்பது கோடியை தொட்ட படம் சர்க்காரைத் தவிர வேறு எதுவுமில்லை என்கிறார்கள் .
முதல் நாள் தீபாவளி காட்சிகள் ஐந்தும் மன்றத்தினருக்கு என ரூ.300 வீதம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள். .