ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறபோது ஜனநாயகத்தின் சட்டையையும் கிழிக்க முடியும்.! அதி நிர்வாணமாக ஓட விடவும் முடியும் என்பதற்கு திராவிட ஆட்சிகளை விட வேறு நல்ல உதாரணம் இருக்கவே முடியாது.
ஜனநாயகத்தில் அரசை விமர்சிக்கும் உரிமை ஊடகம் திரைப்படங்களுக்கு இருந்தாலும் அதை மடக்கும் உரிமை சர்வாதிகாரத்துக்கு இருக்கிறது..
காட்சிகளை நீக்குவது பற்றி பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில் நமக்கு கிடைத்த தகவல்கள், படங்கள் இதோ!
ராஜபாளையத்தில் சன் பிக்சரின் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் ஜெய ஆனந்த் திரையரங்கில் விருதுநகர் மாவட்ட எஸ்பி உத்தரவின் பெயரில் பேனர்கள் மற்றும் கட் அவுட்களை அகற்ற உத்தரவு.*
படத்தில் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது மற்றும் படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற் பெயரை சூட்டியது அதிமுகவினரை கோபம் அடைய செய்துள்ளது.
அதிமுக அமைச்சர் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இதற்கிடையே தியேட்டர்களில் அவர்கள் தங்களுடைய போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கி உள்ளனர். மதுரையில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் ‘சர்கார்’ படம் ஓடிய அண்ணாநகர் சினிப்ரியா காம்ப்ளக்ஸ் தியேட்டர் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் விஜய்யை கைது செய்ய வேண்டும், சர்காரில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளையும், காட்சிகளையும் நீக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது.
கோவையிலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. போராட்டம் காரணமாக சில இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
இந்நிலையில் சர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டுள்ள சர்கார் பேனர்கள் அகற்றப்பட்டது.
சென்னை ராயபேட்டையிலும் திரையரங்கு முன்னதாக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது என திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு நாளை பிற்பகல் படம் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீக்கப்படும் காட்சிகள் குறித்து இன்று முடிவு செய்து, நீக்கப்பட்டு நாளை திரையிடப்படும் என்கிறார்கள்.
6 Attachments