“தமிழ்ச்சினிமா இப்பத்தாங்க அடுத்த கட்டத்துக்கு போகுது, நல்ல படங்கள் வருது”என்று சிலர் பெருமை பட்டுக்கொள்கிறார்கள். ஆனால் முழுத் தோலையும் உரித்த பிறகுதான் அதில் பாதி புழுக் குடைந்திருக்கிறது என்பது தெரிகிறது.
சிறு படத் தயாரிப்பாளர்களும் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு குழுவினை அமைத்து சிறு படங்களை வெளியிடுவதற்கான தேதிகளை ஒதுக்குகிறார்கள்.
அதன்படி வெளியிட முடிகிறதா?
முடியல! ஏன்? ஒத்துமை இல்ல. ஒரு அமைப்பு எடுக்கும் முடிவை இன்னொரு சக்தி வாய்ந்த அமைப்பு அமுக்கி விடுகிறது.
உதாரணமாக—-
விஜய் ஆண்டனியின் ‘திமிர் பிடிச்சவன் ‘படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதாக திட்டமிட்டு தேதி குறிப்பிட்டு விளம்பரம் செய்தார்கள்.
“பத்து மாதத்துக்கு மேல் பிள்ளை வயித்தில தங்குமா சார், வெளியில் வந்துதானே ஆகணும் .அதனால் படம் முடிஞ்சிருச்சு.தீபாவளி ரிலீஸ்” என விஜய் ஆண்டனி செய்தியாளர்களிடம் சொன்னார்.
ஆனால் வரல. தீபாவளிக்கு வரல.?அப்படியானால் எதற்காக தீபாவளி ரிலீஸ் என தேதி போட வேண்டும்?
காரணம் சக்திவாய்ந்த ஒரு விநியோகஸ்தர், பைனான்சியர் ,தயாரிப்பாளர் “இப்ப வேணாம் ‘என தடுத்து விட்டு தற்போது 16 ம் தேதி ரிலீசுக்கு வருவேன் என்று அடம் பிடிக்கிறார்.
சங்கத்தில் உள்ள தயாரிப்பாளர்கள் இவரிடம் பைனான்ஸ் வாங்கியவர்கள் இவரை மீற முடியுமா?
மதுரை அன்புச்செழியனை மத்தியஸ்தராகப் போட்டு பஞ்சாயத்துப் பண்ணினால் மட்டுமே சாத்தியம். ஆனால் நடக்குமா?
சங்கத்திலிருந்து ஒரு அறிக்கை வந்திருப்பதாக ஒரு தயாரிப்பாளர் கூறினார்.
அதில், “நவ.16-ல் உத்திரவு மகாராஜா, செய்,சித்திரம் பேசுதடி,காற்றின் மொழி ஆகிய இந்தப்படங்களைத் தவிர வேறு படத்துக்கு நமது சங்கம் அனுமதி தரவில்லை. சிறிய படங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த தேதியில் அனுமதி பெறாத படங்கள் வந்து மேற்படி படங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது சங்க விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும்”
இந்த உறுதி மொழிக்கு உயிர் இருக்கிறதா என்பதை 16 ம் தேதிக்குப் பின்னர்தான் சொல்ல முடியும்!
இதற்கிடையில் ‘செய் ‘ படத்தின் நடிகர் நகுல் அழுது தீர்த்து விட்டார். “பெரிய படங்கள் வருவது என்ன நியாயம்? சங்கத்துக்குக் கட்டுப்படவேண்டாமா? ஏற்கனவே ஒரு தயாரிப்பாளர் செத்துப் போகிறேன் என துயரத்தின் உச்சிக்கே போய் விட்டார். சங்கம் நிச்சயம் எங்களைக் காப்பாற்றும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால் திமிர் பிடித்தவன் கண்டிப்பாக வந்தே தீரும் என்கிற முடிவில் இருப்பதாக தெரிகிறது.
அன்புச்செழியன், திருப்பூர் சுப்பிரமணியன் போன்றோரின் ஆதரவு இருகிறது.தமிழ்த் திரை உலகின் இரு பெரிய வல்லரசுகள் இவர்கள்தான் அதாவது அமெரிக்கா ரஷ்யா மாதிரி!