மாருதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாரா வேலு தயாரிக்க இயக்குநர் ஏ.ஆர்.ஜே.வேலு இயக்கத்தில் உருவாகியிருக்கும் “எப்ப சொல்லப்போற” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை RKV ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் பழம்பெரும் தயாரிப்பாளர் கலைஞானம் அவர்கள் கலந்து கொண்டு பேசியதாவது,
‘இந்த கால சினிமாவுல நன்றி என்ற ஒன்று வார்த்தையில் மட்டுமே இருந்து வருகிறது. என்னால் அறிமுகமான பலர் இன்று சிகரம் போன்று வளர்ந்துவிட்டார்கள். ஆனால் அறிமுகப்படுத்திய நான் இருக்கும் நிலையை கண்டுகொள்ள ஆளில்லாமல் இருக்கிறேன். கமல்ஹாசன் இன்று உலகம் நாயகனாக வளர்ந்திருக்கிறார். ஆனால் அவரை ஹிரோவாக அறிமுகப்படுத்தியதே நான்தான். தேவர் பிலிம்ஸ் தேவரிடம் நான் பணிபுரியும்போது கமல் என்னிடம் நடன இயக்குநராக பணிபுரிய ஆசை என்று கூறினார். ஏன்யா நீ ஹிரோ மாதிரி இருக்க எதுக்கு டான்ஸ் மாஸ்டராக விரும்புற உன்ன ஹிரோவாக்குறேன் என்று கூறினேன், அதற்கு கமல் பயந்துபோய் “அய்யோ நான் ஹிரோவாக நடிக்கமாட்டேன், நான் களத்தூர் கண்ணம்மாவில் நடித்து 10 வருடங்கள் ஆகிறது. இன்று வரை என்னை யாருமே சீண்டல இப்போ ஹிரோன்னு சொன்ன மக்கள் என்னை ஏத்துக்க மாட்டாங்க” என்று கூறினார். ஆனால் நான் வற்புறுத்தி அவரை குறத்தி மகன் படத்தில் நடிக்க வைத்தேன். அந்த படம் சூப்பர் ஹிட்டாகவே அதன்பின் கமலுக்கு சொந்தப்படம் எடுக்கும் ஆசை வந்து அவரே ஒரு படத்தை தயாரித்து நடித்தார், அந்த படமும் ஹிட்டானது அதன்பின் கமல் வெற்றியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.
இதேபோல்தான் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று உலகம் முழுவதும் புகழப்படும் ரஜினியும், அப்போது அவர் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த காலம், அவரிடன் நடிப்பை பார்த்து வியந்த நான் அவரை பைரவி படத்தில் நாயகனாக்க வேண்டுமென்று விரும்பினேன், இதுகுறித்து தேவரிடம் நான் கூறும்போது ரஜினியை வைத்து நாயகனாக படமெடுக்க முடியாது என்று கூறினார். ஆனால் விடாபிடியாக இருந்து அவரை நாயகனாக்கினேன், படம் பெரும் வெற்றிப்பெற தேவர் என்னை அழைத்து யாருய்யா இந்த ரஜினி இப்படி நடிக்கிறான், அவன்கிட்ட சொல்லி எனக்கும் இரண்டு படம் நடிச்சு கொடுக்க சொல்லு என்று கூறினார். இந்த விஷயத்தை நான் ரஜினியிடம் சொல்ல அவர் உடனே தேவர் காலில் விழுந்துவிட்டார் என்று கலைஞானம் தன் திரையுலக பயணத்தை பகிர்ந்து கொண்டார்.