‘இயக்குநர் சிகரம்’ கே. பாலசந்தர் (வயது 84) உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் இன்று இரவு 7 மணியளவில் காலமானார்.சமீபத்தில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த திங்கள்கிழமை அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் பரவின. இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். உலகநாயகன் கமல்ஹாசன் வீடியோ மூலம் பாலசந்தர் நலம் பெற வேண்டி உருக்கமான செய்தி விடுத்தார்.தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வந்தனர். அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பாலசந்தர்இன்று இரவு 7 மணியளவில் காலமானர். அவரது உடலுக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.பாலசந்தர் 1930 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் பிறந்தவர் .. பள்ளிப் பருவத்தில் நாடகங்களை நடத்தி வந்தவர்,. பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு அரசுப் பணிக்காக வந்தார். அப்போது நாடகத்துறையில் கால் பதித்தார். 1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அழைப்பை ஏற்று, தெய்வத்தாய் படத்துக்கு கதை வசனம் எழுதினார். பின்னர் நீர்க்குமிழி படத்தின் மூலம் இயக்குநரானார். அபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், அவள் ஒரு தொடர் கதை, வறுமையின் நிறம் சிவப்பு, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி உட்பட 100 படங்களை இயக்கியவர் பாலசந்தர். இவர் இயக்கிய கடைசி படம் பொய். இதில் பொய் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அபூர்வ ராகங்கள் படம் மூலமாக நடிகர் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தினார். நடிகர் கமலஹாசன் புகழ்பெறுவதற்கும் காரணமாக இருந்தவரும் பாலசந்தர்தான். அத்துடன் எஸ்.வி.சேகர், மெளலி, ஒய்.ஜி. மகேந்திரன், பிரகாஷ்ராஜ், ராதாரவி, சுஜாதா, ஷோபா, சரத்பாபு, மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பிரபலங்களை தமிழ்த் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர். மேலும் ரெட்டைச் சுழி படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன்இணைந்து நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் கமலஹாசனின் உத்தம வில்லன். விரைவில் இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது. மனித உறவுகள் மற்றும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியவர். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசனகர்த்தா என பல முகங்களைக் கொண்டவர் பாலசந்தர். 1987 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2010 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதையும் பாலசந்தர் பெற்றார். மனைவி பெயர் ராஜம். மகள் புஷ்பா கந்தசாமி. பாலசந்தருக்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் கைலாசம் சமீபத்தில் காலமானார். பாலசந்தரின் உடல் தகனம் நாளை சென்னையில் நடக்கிறது.நாளை காலை 6மணி முதல் பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல் அவரது இல்லத்தில் வைக்கப்படுகிறது. பாலசந்தர் மறைவை அடுத்து நாளை ஒரு நாள் சின்னத்திரை,பெரிய திரை என படப் பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.