கோப்பில் கையெழுத்துப் போடும் கனவுகளில் மிதக்கிறது கோலிவுட்.
அடுத்த முதல்வர் ‘நாமே’ என்கிற ஆசை நினைவுகளில் வழிகிறது. காலிங் பெல் அழுத்தி சிலர் டிரெய்னிங் எடுக்கிறார்களாம்.
“பி ஏ வ வரச்சொல்லு “என்று மனைவியையே மறக்கிறார்களாம். அந்த அளவுக்கு மண்டைக்குள் முதல்வர் பதவி வீங்கிப் போய் கிடக்கிறது.
என்னத்த சொல்ல?
படத்து வசனங்கள் அவர்களைப் பாடாய் படுத்துகிறது.
“கட்டம் சொல்லுது நான்தான் ராஜான்னு” என்று ஜோதிட ஆராய்ச்சி பண்ணுகிறார்கள் .
“அம்பேத்கார் பெயரைச்சொன்னால் தலித் மக்களின் ஓட்டுகளை அப்படியே அள்ளிவிடலாம் என்று அம்பேத்காரின் புத்தகங்களை வரி விடாமல் சிலர் படிக்கிறார்கள்.
பறவைக்காய்ச்சல் பரவிய ஏரியா மாதிரி பதவிச்சூடேறி கிடக்கிறது கோடம்பாக்கம்.
“எவரோ ஒருவர் எழுதியதை மனப்பாடம் செய்து பேசிவிட்டுப் போக அரசியல் ஒன்றும் சினிமாப்படம் இல்லை” என அரசியல்வாதிகள் ஏளனம் செய்தாலும் உள்ளுக்குள் ஒரு உதறல் இருக்கவே செய்கிறது .
ஊரை உருக் குலைத்து போட்டு விட்ட ‘கஜா’ புயல், “செத்தமா பொழச்சமா என்பது கூடத் தெரியாம என்னய்யா ஆட்சி நடத்துறே” என்று மந்திரிகளை கவாத்து வாங்குகிறார்கள் ஏழை மக்கள். ஒப்புக்கு ஆறுதல் சொல்ல வந்த அமைச்சரின் காரையே உருட்டி வீசி விட்டார்கள் .அந்த அளவுக்கு அரசு மீது ஆத்திரம். அவருக்கே அப்படி என்றால் நம் நிலை என்னாவது என்கிற பயத்தில் சி.எம்.
“கிளம்புங்கய்யா விமானத்தில் !” ஏரியல் சர்வேயாம்.
திமுக.தான் முன்னணியில் இருக்கிறது. வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு இறங்கி இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
ஒரு கோடி நிவாரண நிதியும் கொடுக்கிறது தி.மு.க. ஆக அடுத்து ஆட்சியை பிடிப்பதில் அரசியல் சைடில் திமுக முன்னிலையில்.! மற்ற கட்சிகள் கூட்டணி கட்சிகள்தானே! எவரின் தோள் அகலமாக இருக்கிறதோ அதில் ஏறி அமர்ந்து விடவேண்டியதுதானே!
கலை உலகில் தற்போது புதிய பிரச்னை!
சூர்யா ஐம்பது லட்சம் நிதி கொடுத்திருக்கிறார். இவரே 50 கொடுத்திருக்கிறார் என்றால் கமல்,ரஜினி,விஜய்,அஜித் இவர்கள் எல்லாம்?
ஒரு கோடியாவது கொடுத்தால்தானே மக்களின் ஏளனத்திலிருந்து தப்ப முடியும்?
என்ன நடக்கப் போகிறது? அரியாசனத்தில் அமரப்போகும் போட்டியில் யாருக்கு வெற்றி?
–தேவிமணி