ஜெயம்ரவி , த்ரிஷா,அஞ்சலி, சூரி ,பிரபு ,ராதாரவி நடித்திருக்கும் படம் ‘சகல கலா வல்லவன்’. இதற்குமுன்பு ‘அப்பாடக்கர்’ என்று பெயர் வைக்கப்பட்டு இப்போது மாற்றப் பட்டுள்ளது.
இது லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 27 வது படமாக உருவாகியுள்ளது.
சுராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் ஜெயம்ரவி பேசும் போது ” இந்த ‘சகல கலா வல்லவன்’ என்கிற தலைப்புக்கு நான் அருகதையானவனா என்று தெரியாது .ஆனால் அந்த ‘சகல கலா வல்லவன்’வேறு; இந்த ‘சகல கலா வல்லவன்’வேறு. ‘அப்பாடக்கர்’ என்றால் அனைத்தும் கற்றவன் என்று அர்த்தம் வந்ததால் இந்த தலைப்பை வைத்தோம் இந்த லட்சுமி மூவி மேக்கர்ஸுக்கு ‘தாஸ்’ படத்துக்குப் பிறகு நான் நடிக்கும் இரண்டாவது படம் இது.எப்போதும் நான் சீரியாஸாகத்தான் கதை கேட்டேன் அப்படித்தான் என்னைப்பற்றிச் சொல்வார்கள். இந்தக் கதையை சுராஜ் சொன்ன போது சிரித்துக் கொண்டே கேட்டேன்.படப்பிடிப்பில் த்ரிஷாவிடம் நான் பேசினலே கேமரா மேன் செந்தில்குமாருக்குப் பிடிக்காது. உடனே ஷாட் ரெடி என்று அழைப்பார்.காரணம் பொறாமையல்ல, அந்த அளவுக்கு வேகமாக எடுத்தார் என்கிறேன்.த்ரிஷாவுடன் இது எனக்கு மூன்றாவது படம் .எல்லாரும் கேட்கிறார்கள் த்ரிஷாவை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா? தொடர்ந்து நடிக்கிறீர்களே என்று. ஆமாம் த்ரிஷா எனக்கு ரொம்பப் பிடிக்கும்.இதில் சந்தேகமில்லை இதிலென்ன தப்பு? த்ரிஷா எனக்கு நல்ல நண்பர். அவர் எல்லா விஷயத்திலும் தெளிவாக இருப்பார். அந்தத் தெளிவு எனக்குப் பிடிக்கும்
த்ரிஷாவும் நானும் பத்து பன்னிரண்டு ஆண்டுகளாக சினிமாவில் பயணம் செய்து வருகிறோம். இதில் அவர் தமிழில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும். இதில் நடிக்கும் இன்னொரு நடிகை அஞ்சலிக்குக் நல்ல கேரக்டர்தான்.
அஞ்சலி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அஞ்சலியை சிபாரிசு செய்தது நான்தான். மற்றவர்கள்
10 படத்தில் கமர்ஷியலாக நடித்தால் ஒரு படத்தில்தான் சோதனை முயற்சியாக நடிப்பார்கள்.அஞ்சலி 10 படத்தில் சோதனை முயற்சியாக நடிப்பவர். ஒரு படத்தில் மட்டும்தா ன் கமர்ஷியலாக நடிப்பவர். பிரபு சார்என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி இதில் அவர் என் அப்பாவாக நடித்து இருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேல் சூரி நன்றாக நடித்துள்ளார். அவர் அடுத்த காமெடி சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவார்.
விவேக் சார் ஈகோ பார்க்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். ‘குமரன் சன் ஆப் மகாலட்சுமி’க்குப் பிறகு அவருடன் நடித்தேன். நிறைய கற்றுக் கொண்டேன்.
இதை வெறும் காமெடி படம் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஒரு நல்ல கதையில் முக்கியமான ஒரு விஷயத்தையும் சொல்லியிருக்கிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்தாலே கூட்டுக் குடும்பம் என்பார்கள் போலிருக்கிறது.
இன்றைக்கு திருமண அமைப்பு மீது ஊசலாட்டம் இருக்கிறது. அவ நம்பிக்கை நிலவுகிறது அதற்கு இதில் நல்ல பதில் சொல்லப்பட்டு உள்ளது. நமது பலம் திருமணம், குடும்பம் என்று சொல்லப்பட்டு உள்ளது.
நான் முழுப்படமும் காமெடியாக நடித்துள்ள இப்படம் எல்லாருக்கும் பிடிக்கும்-” இவ்வாறு ஜெயம்ரவி பேசினார்.