ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தில்
முழுக்க, முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இது அ.தி.மு.க.வினரை கோபம் அடைய செய்தது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சர்கார் திரைப்படத்தின் பேனர்களையும், கட் அவுட்டுகளையும் சேதப்படுத்தி அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அக்காட்சிகளையும் அதிரடியாக படக்குழு நீக்கியது.இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் முன் ஜாமீன் கேட்டு நவம்பர் 9ந்தேதி முருகதாஸ் மனு செய்தார். இயக்குநர் முருகதாசை வரும் 27ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘சர்கார்’ படத்தில் அரசுத் திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில், அரசின் திட்டங்களையும் அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்றும் உத்தரவாத பத்திரம் தாக்கல்செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார். இதுதொடர்பாக, முருகாதாஸிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டுமென அவரது வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து, வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.