அதிகாலையில் ஐந்து மணிக்கு அலாரம் வைத்து அவசரம் அவசரமாக ஷேவ் பண்ணி, காலை நேரத்துக் கடன்களை கழித்து விட்டு பைக்கைக் கிளப்பிக் கொண்டு போய் டைரக்டர் ஷங்கர் படம் பார்ப்பதிலும் ஒரு திரில் இருக்கிறது. அவ்வளவு சீக்கிரமாக போகாவிட்டால் பாதுகாப்பான இடத்தில் பைக்கை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்த முடியாது.நல்ல கூட்டம். பத்திரிகையாளர்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் .விசில் அடித்து 2 பாயின்ட் ஓ பார்த்தார்கள்.
எத்தனை கடுமையான உழைப்பு.
படத்தில் தெளிவாகத் தெரிகிறது.
இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஎப்எக்ஸ் வல்லுநர்களின் திறமை படத்தின் மேன்மைக்கு உதவி!. மேலைநாட்டுப் படங்களுக்கு நிகர். அத்தனை செல்போன்களும் ஆகாயத்தில் பறந்து ராஜாளி மனிதன் பட்சிராஜா அக்சய்குமாரின் உடலில் பதிந்து கொள்வது படு மிரட்டல்.
த்ரி டி எபெக்ட்ஸ் கண்களை ஊடுருவித் தழுவுகிறது.
ஹாலிவுட் படங்களுக்கு இணையான முதல் இந்தியப்படம்,அதுவும் தமிழன் இயக்கிய தமிழ்ப்படம் என்கிறபோது பெருமைதானே!. இந்திய திரை வரலாற்றில் தனி இடம் உண்டு .
பணம் என்று பாராமல் அருவியென கொட்டியிருக்கிறார் தயாரிப்பாளர் சுபாஸ்கரன்.
முதல் இந்திய விஞ்ஞான அறிவியல் கற்பனை திரைப்படம் என்கிற பெருமையுடன் முதல் இந்திய 4 டி படம் என்கிற சிறப்பு இந்தப்படத்துக்கு இருக்கிறது.
நவீன கண்டுபிடிப்புகளால் நன்மையுடன் தீமையும் பெருமளவில் இருக்கிறது. செல்போன் டவர்களின் கதிர் வீச்சால் குருவி போன்ற பறவை இனங்கள் அழிந்து போகின்றன என்பதுதான் ஷங்கர் கதையின் மையக்கருத்து. சாதாரண கதையை எப்படி மிரட்டலாக சொல்லமுடியும் என்பதற்கு இந்த படம் நல்ல உதாரணம். காமடி ,காதல் இவைகளுக்கு அவ்வளவாக முக்கியம் இல்லை என்றாலும் சிட்டி ரஜினி, நிலா எமி இருவரது பார்வையிலும் பேச்சிலும் ஜாடை மாடையாக!
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒளிவட்டம் (‘ஆரா’)உண்டு என்பதற்கு அக்சய் குமார் பயன்பட்டிருக்கிறார்.
தற்கொலை செய்து கொண்ட மனிதரை பேய் என சொல்லாமல் உயர்ந்த நோக்கம் கொண்ட பறவைகள் மீது பாசம் கொண்ட மாயசக்தியாகவே காட்டி இருக்கிறார் அதில் சற்றே வில்லத்தனம்
.நாயகனுக்கு எதிர்சக்தியாக வருகிறவர்கள் சமபலம் கொண்டவர்களாகத்தானே இருப்பார்கள். அக்சய்குமார் நல்ல தேர்வு.
வசீகரன்,சிட்டி 2.0 .குட்டி 3.0 என ரஜினி மூன்று வேடங்களில்.புறா மேல் குட்டி ரஜினி அமர்க்களம். சரியான இடத்தில் அந்த காட்சி இடம் பெற்றது ஷங்கருக்கே உரியது.இந்த கதைக்கும் டெக்னிகல் ரீதியான அமைப்புக்கும் ரஜினியை விட சிறந்த தேர்வு வேறு யாரும் இல்லை. கமர்ஷியல் ரீதியாக பொருந்துகிறவர் ரஜினி.
3 டி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வது தனிக்கலை. எல்லோராலும் செய்துவிடமுடியாது.நீரவ்ஷாவின் கைவண்ணம் ஆண்டனியின் கத்திரி வெட்டு கிராபிக்ஸ் கலைஞர்களுக்கு பெரிது துணையாக அமைந்திருக்கிறது.
குறிப்பாக ஆர்ட் டைரக்டர்முத்துராசுக்குபாராட்டு விழாவே நடத்தலாம்.
ஐசரி கணேஷ் சிறிது நேரமே என்றாலும் நல்ல தேர்வு. அமைச்சரின் பி.ஏ,வாக மயில்சாமி. வடிவேலுக்குக் கிடைக்காத வாய்ப்பு மயிலுக்கு இந்த முப்பரிமாணப் படம். பல மொழிகளுக்குப் போகிற இந்த படத்துக்குத் தகுந்த பின்னணி இசை ஆஸ்கார் ரகுமான். வெகு சிறப்பு.படத்தின் முத்திரை காட்சி என்றால் கிளைமாக்ஸ் தான். அவ்வளவு பிரமாண்டமான ஸ்டேடியத்தில் பிரளயத்தை உண்டாக்கி இருக்கிறார் ஷங்கர்.
இது ஷங்கரின் படம்.மதிப்பெண்களுக்குள் அடங்காத படம்.