காட்டா குஸ்தி,போட்டா போட்டி என்று மதுரை பாணியிலேயே விஸ்வாசமும்,பேட்டயும் பொங்கலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.
இரண்டு படங்களும் பொங்கல் ரிலீஸ் என்பது உறுதியாகி விட்டது.
2 பாயின்ட் ஓ ஓடிக்கொண்டிருக்கிற தியேட்டர்களை பொங்கலுக்குக் கைப்பற்ற முடியுமா என்று சன் நிறுவனம் இப்போதே கணக்குப் போட்டு வேலை பார்க்கிறது.
ஆனால் தல படத்தின் தமிழக உரிமையை வாங்கி இருக்கும் கே.ஜே.ஆர் .ராஜேஷ் தென்மாவட்டங்களில் இருக்கும் முக்கியமான தியேட்டர்களை தனது படத்துக்காக வளைத்துப் போட்டு விட்டார்.
தல போடும் பிரியாணி விருந்தாக விசுவாசத்தை நினைத்துக் கொண்டிருக்கிற அவரது ரசிகர்கள் வெறியுடன் காத்திருக்கிறார்கள்.
ஷங்கரின் 2 பாயிண்ட் ஓ வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கிற சூப்பர்ஸ்டாரின் ரசிகர்களோ “எங்களுக்கு இன்னொரு சர்க்கரைப் பொங்கல்” என கொண்டாடுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
“நீங்கதான் சர்கார் படத்தில் அள்ளிட்டிங்களே, கை நட்டமடைந்த விவேகம் தயாரிப்பாளருக்கு வழி விட்டா அவரும் அறுவடை செய்வார்ல “என கோடம்பாக்கத்து நடுநிலையாளர்கள் சொல்வதை சன் நிறுவனம் கேட்குமா என தெரியவில்லை. அவர்களது வசமும் தியேட்டர்கள் இருக்கின்றன.
அதாவது தமிழகத்தில் சன் அண்ட் திருப்பூர் சுப்பிரமணியம் ஆகிய இருவர் வசம்தான் தியேட்டர்கள் அதிகம் இருக்கின்றன. இவர்கள்தான் படத்தின் விதியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள்.. இவர்களை மீறி தயாரிப்பாளர்கள் சங்கம் எதுவும் செய்ய முடியாத நிலைதான் இருக்கிறது. இத்தகைய சூழலில்தான் பொங்கல் போட்டியில் விஸ்வாசமும் பேட்டயும் இறங்க இருக்கின்றன.