வல்லினம் படத்தின் ‘நகுலா’ பாடல் மூலம் பாடலாசிரியராக களமிறங்கியவர் பார்வதி .இவர் திரையுலகப்பயணம் குறித்து பேசுகையில்,. நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.பள்ளியில் மேம்பட்ட ஆங்கிலம், கல்லூரியில் இளங்கலை, முதுநிலை ஆங்கில இலக்கியம் படித்தேன். எம். பில்., தகவல் தொடர்பியலும் முடித்திருக்கிறேன். ஆங்கில இலக்கியம் பயின்றிருந்தாலும் சிறு வயதிலிருந்தே தமிழ் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. சிறு வயதில் பாரதியார் மேல் கொண்ட ஈடுபாடு இன்று வரை தொடர்கிறது. பத்திரிகையாளர் – அரசியல் விமர்சகர் ஞாநியின் ‘பரீக்ஷா’ நாடகக் குழுவில் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளேன். குறும்படங்களிலும் நடித்தும் டப்பிங் கொடுத்தும் இருக்கிறேன். கடந்த சில வருடங்களாக நடிப்பதில்லை. தூர்தர்ஷன் பொதிகையில் ஐந்து வருடங்கள் தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். தி வீக் உட்பட சில பத்திரிகைகளில் ப்ரீலான்ஸ் நிருபராகவும் இருந்திருக்கிறேன். படிக்கும் போதே என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘இப்படிக்கு நானும் நட்பும்’ வெளியிட்டேன். கவிஞர் அறிவுமதியின் ‘நட்புக்காலம்’ ஏற்படுத்திய பாதிப்பில் எழுதப்பட்டது அத்தொகுப்பு. 2010-இல் என் இரண்டாம் கவிதைத் தொகுப்பான ‘இது வேறு மழை’ யை வெளியிட்டேன். அதற்குப் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அணிந்துரை எழுதியிருந்தார். அதற்குப் பிறகு திரைப்படங்களில் பாடல் எழுத முயற்சித்தேன். நான் முதலில் பாடல் எழுதிய திரைப்படம் நடிகர் நகுல் நடித்த ‘வல்லினம்’. அவர் பெயர் கொண்டு எழுதப்பட்ட ‘நகுலா’ என்ற அப்பாடலை நடிகர் நகுலே பாடினார். வல்லினத்தில் முதலில் எழுதியிருந்தாலும் முதலில் வெளிவந்த திரைப்படம் ‘ஜில்லா’. அதில் நான் எழுதிய ‘வெரசா போகையிலே’ சூப்பர்ஹிட்டானது. பிறகு ‘திருமணம் எனும் நிக்காஹ்’வில் ‘கண்ணுக்குள் பொத்திவைப்பேன்’ என்ற சூப்பர்ஹிட் பாடலும் ‘யாரோ இவள்’ என்ற பாடலும் எழுதியிருந்தேன். பிறகு ‘அமரகாவியம்’ திரைப்படத்தில் ‘ஏதேதோ எண்ணம் வந்து’ என்ற அழகிய மெலடி பாடல் எழுதினேன். இப்போது ‘களம்’, ‘கொளஞ்சி’ உட்பட எட்டு திரைப்படங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். மிர்ச்சி மியூசிக் அவார்ட்சில் என்னுடைய மூன்று பாடல்கள் நாமிநேட் ஆனதில் மகிழ்ச்சி.என்கிறார்