மறைந்த பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி’ என்ற பிரத்யேக இசை நிகழ்ச்சியை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் . இசைஞானி இளையராஜா நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்பட ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல்கள் என்று தெரியாத பருவத்தில் இருந்தே அவரது பாடல்களில் ஈர்க்கப்பட்டேன். தேவதாஸ் படத்தில் “உலகே மாயம் வாழ்வே மாயம் ,நிலையேது நாம் காணும் சுகமே மாயம்” என்ற பாடலைத் தந்தார். ஆனால் அவர் பெயரைக் கூடப் போட்டுக் கொள்ளவில்லை. ‘குலேபகாவலி’ படத்தில் அவர் இசையமைத்த “மயக்கும் மாலை பொழுதே நீ போபோ” பாட்டை இப்போதைய சூப்பர் ஸ்டாருக்கு போட முடியாது. இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் காலகட்டமாக அது இருந்தது. அந்த காலத்துப் பாடல்களை இப்போதும் பாடலாம். ஆனால் இன்றைய பாடல்களை பாட முடியாது. அதே மாதிரி நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் , நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலில் இடம் பெறும் ‘தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் ஒரு தூதும் இல்லை, உன் தோற்றம் இல்லை, கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை( வரிகளை பாடிகாட்டுகிறார். தொடர்ந்து இவ்வரிகளையே பாடலாசிரியர் வைரமுத்து ஸ்டைலில் வாசித்து காட்டி விட்டு )எப்படி பாட வேண்டிய பாடலை இப்படி வாசிச்சா அதில் எங்கே ஜீவன் இருக்கும். எல்லோரும் ஓடிவிட மாட்டார்களா! என வைரமுத்துவை கிண்டலடிக்கவும் இளையராஜா தயங்கவில்லை! தொடர்ந்து,இன்றைக்கு உள்ள இளம் இசையமைப்பாளர்கள் கம்ப்யூட்டர் சிப்களை தூக்கிப் போட்டுவிட்டு உங்கள் மூளையில் உள்ள சிப்ஸ்களை பயன்படுத்தி இசையமையுங்கள் சொந்த மூளையைப் பயன்படுத்துங்கள். அண்ணன் எம்எஸ்வி இசையில் என் இளம் வயதில் நான் கேட்ட பாடல் “மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி..” என்ன ஒரு அற்புதமான பாட்டு அது. புத்தகப்பையை தூக்கிக் கொண்டு கோம்பை பள்ளிக் கூடத்துக்குச் சென்று கொண்டிருந்த போது இந்தப் பாடலைக் கேட்டேன். என்னை அறியாமல் அந்த பாடலுக்குள் போய்விட்டேன். அந்தப் பாடலில் வரும் ‘தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்’ என்ற வரிகள் தான் என் எதிர்காலம் குறித்து அந்த வயதிலேயே யோசிக்க வைத்தன. “மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா…” இந்தப் பாடலில் வரும், “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்… …உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு” என்ற இந்த வரிகள்தான் கஷ்டப்படும் போது எனக்கு நம்பிக்கை ஊட்டின என்று கவிஞர் வாலி என்னிடம் சொல்லி இருக்கிறார். தனா, தனா, தனா என்ற சந்தத்தை மட்டுமே பயன்படுத்தி “வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா” பாடலை கொடுத்தார். அவர் இசையில் ஒழுக்கம் இருந்தது. இப்போதைய இசையில் ஒழுக்கம் தவிர மற்ற எல்லாமும் இருக்கிறது,” என்றார்.