விட்டுக்கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை என எதுகை மோனையாக சொன்னாலும் அதில் உண்மை இல்லாமல் இருப்பதில்லை.
ஆனால் அது இடத்தைக் கொடுத்துவிட்டு மடத்தை பிடுங்குவதாக இல்லாமல் இருக்க வேண்டும்.
பெரிய தொழிலதிபர்கள் நட்டப்படாமல் இருப்பதற்கு அவர்களுக்குள் இருக்கிற தொழில் போட்டியில் விட்டுக் கொடுத்துப் போவார்கள்.ஆனால் சினிமா உலகில் குறிப்பாக தமிழ்ச்சினிமாவில் இருக்கிறதா?
பொங்கல் திருநாளுக்கு சூப்பர் ஸ்டாரின் பேட்ட ,தல யின் விஸ்வாசம் ஆகிய இருபடங்களுக்கு இடையில்தான் போட்டி.
சன் நிறுவனம் பேட்ட யை தயாரித்திருக்கிறது. வலிமையான கார்ப்பரேட் நிறுவனம்.கை வசம் சக்தி வாய்ந்த பிரசார எந்திரங்களை வைத்திருக்கிறது. அரசு மட்டுமே அதை மட்டுப் படுத்த முடியும். கட்டுப் படுத்த முடியாது.
அடுத்த வருடத்திலிருந்து மாதம் ஒரு தமிழ்ப்படம் தயாரித்து வெளியிட திட்டமிட்டிருக்கிறது.இதனால் தியேட்டர் அதிபர்கள் சன் வசம் போய் விட்டார்கள். சன்னும் தனது கட்டுப்பாட்டில் பெரிய அளவில் தியேட்டர்களை வைத்து இருக்கிறது. இதனால் இந்த நிறுவனத்தை எதிர்ப்பது அவ்வளவு எளிதல்ல.
பேட்ட வெளியாகும் அதே நாளில் சத்யஜோதி தியாகராஜனின் விஸ்வாசம் படமும் ரிலீஸ் ஆகிறது. ‘தல படத்துக்குத்தான் தியேட்டர் அதிபர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள்.அவர்களுக்கு அஜித்தின் ரசிகர்களின் பக்க பலமாக இருப்பார்கள்.ஆனால் சன்னின் கோபத்தை சந்திக்க தியேட்டர் அதிபர்களால் முடியாது. விஸ்வாசம் படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டமாகிவிடும்.
பேட்ட ய தள்ளி வெளியிடவும் சன் சம்மதிக்காது. ரஜினியின் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்படும். இதை உணர்ந்த சத்யஜோதி தியாகராஜன் நேரடியாக ரஜினியை சந்தித்து பேட்டைய தள்ளி வெளியிடும்படி கேட்டுக் கொண்டிருப்பதாக ஒரு செய்தி அடிபடுகிறது.
இவரது மாமனார் ஆர்.எம்.வீரப்பன் மீது ரஜினிக்கு பெரிய மரியாதை இருக்கிறது.இதனால் சத்யஜோதியின் வேண்டுகோளை ரஜினியினால் தட்டிக்கழிக்க முடியாது. ரஜினி வழியாக வருகிற கோரிக்கையை சன்னும் தட்டிக்கழிக்க இயலாது.
எனவே பேட்ட பொங்கலுக்கு வராது என சொல்கிறார்கள்.தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார்கள்.
ரஜினியின் படம் எப்போது வந்தாலும் திருவிழாதான் ,ஆகவே கலெக்சனுக்கு குறைவிருக்காது என்கிற நம்பிக்கை ரஜினிக்கு இருக்கிறது. சன்னுக்கு இருக்குமா?