கிராமத்துக் காதல் கதை. எத்தனையோ கதைகள் வந்திருந்தாலும் பத்தோடு பதினொன்னு என்று தள்ளிவிடமுடியாதபடி கிளைமாக்சை வைத்திருக்கிறார் சந்தோஷ் தியாகராஜன்.
பேசப்படவேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட கிளைமாக்ஸ்.
என்னடா தொடக்கத்திலேயே கிளைமாக்சை தொடுகிறானே என்று நினைக்கிறீர்களா, சரி கடைசியில் கச்சேரியை வைத்துக் கொள்வோம்.
மருது ஏழை. அம்மா விஜி சந்திரசேகர் கருவாடு விற்று மகனை கல்லூரியில் படிக்கவைக்கிறார். மருதுவாக நடித்திருக்கிற கீதனுக்கு நடிப்பு நல்லாவே வருகிறது. பூரணியாக வருகிற வர்ஷாவை காதலிக்கிறார். இங்கேதான் இயக்குநர் வித்தை காட்டியிருக்கிறார்.
“எங்க அப்பா,மாமா யாரை சொல்றாங்களோ அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்”என்று வர்ஷா கட்டையைப் போட கல்லூரி மாணவன் மருதுவுக்கு அதிர்ச்சி. ஆனால் மனசுக்குள் காதலி மத்தாளம் கொட்டுகிறாளே அவனால் மறக்க முடியல சாமி அவளை.!
வழக்கம்போல காட்சிகள்.ஆனாலும் வர்ஷாவின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. மருதுவின் அடங்கா காதல் அவனை போலீஸ் நிலையம் கொண்டு செல்கிறது. விஜி சந்திரசேகரின் நடிப்புக்காகவே அந்த காட்சியோ என நினைக்கிற அளவுக்கு போலீஸ் நிலையத்தில் நம்மை கசிய வைத்து விடுகிறார்.சிறப்பான நடிப்பு.
“உன் மேல் காதல் இல்லே”என சொல்லிய வர்ஷாவின் உள்மனம் மருதுவைத்தான் நாடுகிறது என்பதற்காக அமைக்கப்பட்ட காட்சிகளில் வர்ஷா உணர்வுகளை கொட்டி இருக்கிறார்.
காதலை ஜெயிக்க விடலாமா? ஒன்னு சேர்த்து விடலாமா அல்லது பிரித்து விடலாமா?ஏதாவது வித்தியாசமா செய்யணுமே? ஒளிப்பதிவாளர் திருஞானசம்பந்தம் கிராமிய சூழலை பிரமாதமாக காட்டி விட்டார். ஜோஷ் பிரங்க்லினும் நல்லபடியா மியூசிக் போட்டுட்டார்.வர்ஷாவின் மாமா சிறப்பாகவே நடிச்சிட்டாலும் இன்னும் ஸ்ட்ராங்கா ஏதாவது செய்யணுமே?” இப்படியெல்லாம் நினைத்து விட்டாரோ என்னவோ இயக்குநர் சந்தோஷ் தியாகராஜனின் கிளைமாக்ஸ் நமக்கு உடன்பாடில்லாமல் போய்விட்டது.
“நான் தூக்கி வளத்த பொண்ணு ,அந்த புள்ளையைப் போயி கல்யாணம் பண்ணுவேனா “என உருகும் தாய்மாமன் அப்படியா நடந்து கொள்வான்.? சீமத்துரை புதிய அம்பிகாபதி -அமராவதி மாதிரி.!