மதம் பிடித்த யானை திக்குத் திசை அறியாமல் ஓடி ஊரை சீரழித்தது போல கடந்த நவ.1 5 -ல் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் தமிழர்களை வேட்டையாடியது.
திக்கற்றுப் போனார்கள் மக்கள்.
தேம்பி அழுதார்கள்.
வாழ்ந்த வீடும் தொலைந்தது.
வாழ்வாதாரங்களாக இருந்த தென்னை,பனை,வாழை ,ஆடு மாடு எல்லாமே அழிந்தது.
அரசு உதவி ஆடி அசைந்து வருவதற்குள் அடுத்த மழையும் வந்து போனது.
மக்கள்தான் உதவினார்கள். திரை உலகத்தைச் சார்ந்தவர்களும் அவர்களது ரசிகர்களும் பெருமளவில் உதவி செய்தார்கள்.
கவிப்பேரரசு வைரமுத்து தஞ்சை மாவட்டம் வல்லத்தில் 1 0 0 8 குடும்பங்களுக்கு ஆடுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது,
“ஒரு பசுமாடு – ஓர் ஆடு – ஒரு முருங்கை மரம் – ஒருவெட்டரிவாள் – 50டன் அரிசி – 5000 வார்த்தைகள் இவ்வளவோடு ஒரு விவசாயியின் வாழ்க்கை முடிந்து விடுகிறது.
இவை எல்லாவற்றையும் இழந்து விட்டால் கிராமத்து மக்களுக்கு ஏது வாழ்க்கை?
புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் வேளாண் குடும்பத்துபெருமக்களே…
எதை இழந்தாலும் நம்பிக்கை இழக்காதீர்கள்
சமுதாயத்தில் ஈரம் இன்னும் வற்றி விடவில்லை.
உங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
உங்களில் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது.
வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது.
கஜா புயலை கணக்கெடுக்க வந்த மத்தியக் குழுவினர் கால்களில் விழுந்து சிலபேர் கண்ணீர் விட்டார்கள்.
யாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை . கேட்பது உங்கள்உரிமை; கொடுப்பது அவர்கள் கடமை.
ஒதுக்கப்பட்ட நிதிபோதாது என்பது எங்கள் எண்ணம்.
சுட்ட ஓட்டில் சொட்டு நீர் விழுந்தது மாதிரி இருக்கிறது இந்தச் சிறிய தொகை.
இன்னும் பெருந்தொகை வழங்கப்பட வேண்டும்
நிலங்களிலெல்லாம் தென்னை மரங்கள் பிணங்களாகவிழுந்துகிடக்கின்றன.
தென்னை மரத்திற்கு உயிருண்டு என்று நம்புவதால் அதை ‘தென்னம்பிள்ளை’ என்றுவிவசாயி அழைத்தான்.
இழந்த மரங்கள் நடப்பட வேண்டும் .
.இந்தியா முழுவதிலிருந்தும் பிலிப்பைன்சிலிருந்தும்தேவையான தென்னங் கன்றுகள் உழவர்களுக்குஇலவசமாக வழங்கப்பட வேண்டும்.
தென்னை மரங்கள் பலன்தரும் வரைக்கும் அரசு அவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார்.