“மன்னிப்பா கேட்கச்சொல்கிறாய், என் கருத்து சுதந்திரத்தைப் பறிக்க முடியாது ” என்று மனோகரா பாணியில் முழக்கமிட்ட இயக்குநர் ஏஆர்.முருகதாஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
நீதிபதி இளந்திரையன் முன்பாக வருகிற 1 3 ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது.
மத்திய தணிக்கைக் குழு அனுமதித்த காட்சிகளை அதிமுக அரசின் நிர்பந்தம் காரணமாக ‘சர்கார்’ படத்தின் காட்சிகளை மறு தணிக்கை செய்து வெளியிட்டார்கள்.
சர்கார் படத்தில் அரசின் இலவசங்களை விமர்சித்து காட்சிகள் அமைந்திருந்தன.நாட்டு நடப்பு அரசியல் கடுமையாக கண்டிக்கப்பட்டிருந்தன.வசனங்கள் கூர்மையாக இருந்தன.
எல்லாவற்றுக்கும் மேலாக அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப் படுகிற தளபதி விஜய் இந்த படத்தின் நாயகன்.
ஜெயலலிதா காலத்தில் இருந்தே இவரது படங்களுக்கு பலவித தடைகள். மிரட்டப்பட்டதாகவும் சொல்வார்கள்.
“சர்கார் படத்தின் காட்சிகளும் வசனங்களும் அரசைத் தாக்குவதாகவே இருக்கின்றன.அம்மா இருந்தால் இப்படி நடக்குமா “என அமைச்சர்களே பேச ஆரம்பித்தார்கள்.
இதன் பிறகுதான் அதிமுகவினர் தியேட்டர்கள் முன்பாக ஆர்ப்பாட்டம்,போஸ்டர் கிழிப்பு,கட் அவுட் உடைப்பு என காரியங்களில் கடுமையாக இறங்கினார்கள்.
சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் இயக்குநர் முருகதாஸ் மீது வழக்கு தொடர்ந்தார். அரசின் நலத்திட்டங்கள் விமர்சிக்கப்பட்டிருக்கின்றன .கடுமையாக தாக்கி இருக்கிறார்கள் என அரசின் சார்பிலும் நீதி மன்றத்தில் சொல்லப்பட்டது.
“முருகதாஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் ,எதிர்வரும்காலங்களில் அரசின் திட்டங்களை விமர்சிக்கக்கூடாது” என்று உத்திரவிடக் கோரியும் அரசு வலியுறுத்தியது.ஆனால் முருகதாஸ் தனது கருத்துரிமை என சொல்லி மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 1 5 3 , 1 5 3 ஏ 5 0 5 ஏ ஆகிய பிரிவுகளின்படி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.