விக்ரம் பிரபுவும் அவரது நண்பர்களும் மேடை நாடக நடிகர்கள். ஆனால், நாடகத்துக்கு போதிய வரவேற்பு இல்லாததால் , நிஜ வாழ்க்கையில் காதலுக்கு உதவுவதற்கு நாடக யுக்தியைப் பயன்படுத்துகிறார்கள். அந்த ஐடியா நன்றாக வேலை செய்யத் துவங்க, பல காதலர்கள் தாங்கள் விரும்பும் பெண்ணின் விவரங்களோடு விக்ரம் பிரபுவின் குழுவை நாடுகிறது. அதில் பணக்காரரான நவ்தீப்பும் ஒருவர். தான் காதலிக்கும் பெண்ணான கீர்த்தி சுரேஷின் விவரத்தை விக்ரம் பிரபுவிடம் கூறி, தன்மேல் கீர்த்தி சுரேஷிற்கு காதல் வரும்படி செய்யக் கேட்கிறார் நவ்தீப். ஆனால், நவ்தீப் விரும்பும் அந்தப் பெண் தன் முன்னாள் காதலி கீர்த்தி என்பது தெரிந்ததும் அதிர்ச்சியாகிறார் விக்ரம் பிரபு. கீர்த்தியும், விக்ரம் பிரபுவின் ஃப்ளாஷ்பேக் என்ன? ஏன் பிரிந்தார்கள்? நவ்தீப், கீர்த்தியின் காதலுக்கு விக்ரம் பிரபு உதவினாரா? இல்லையா? என்பது தான் மீதிக்கதை! புதிய கதாபாத்திரத்தில் அருண் என்ற பெயருடன் காதல் தரகராகவும், கீர்த்தி சுரேஷின் காதலராகவும் நடித்து தன் நடிப்பை நன்றாக வெளிகாட்டியுள்ளார் விக்ரம் பிரபு. விக்ரம்பிரபு கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் நன்கு கவனம் செலுத்தினால்அவரது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள உதவும்.கீர்த்தி சுரேஷ், முன்னாள் நாயகி மேனகாவின் வாரிசு என்பதையும் தாண்டி ரசிகர்களை தன பக்கம் ஈர்த்துள்ளார்.சந்தோஷாக நவ்தீப், விக்ரம் பிரபுவின் அப்பாவாக நாசர், அம்மாவாக அம்பிகா, சார்லி, ஆர்.கே பாலாஜி, லொள்ளு சபா ஜீவா, பாலாஜி வேணுகோபால், அஜய் டைசக், லுத்புதீன் பாஷா, சுதா கிருஷ்ணா அய்யர், காவ்யா ஷெட்டி என பலரும் தங்கள் கேரக்டர்களை சிறப்பாக செய்துள்ளனர். நாயகனுக்கும், நாயகிக்கும் காதல் வருவது… பின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு சம்பவத்தால் பிரிந்து போவது, பின்னர் தங்களுக்குள் இருக்கும் காதலை ஒருவருக்கொருவர் வெளிக்காட்டாமல் மனதிற்குள்ளேயே பூட்டி மருகுவது என காலம் காலமாக சொல்லிவரும் அதே கதையைத்தான் இயக்குனர் விஜய்யும் ‘இதில் என்ன மாயம்’ எனக் காட்டியிருக்கிறார். விக்ரம் பிரபுவுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் ஏற்படும் காதல் காட்சிகளில் அழுத்தம் இல்லாததும், விக்ரம் பிரபுவும், கீர்த்தியும் பிரிவதற்கான காரணமும் ‘சொத்தை’. முதல்பாதியில் இருந்த வேகமும், விறுவிறுப்பும் இரண்டாம்பாதியில் குறைந்து போவதும், படத்தின் உச்சக்காட்சி எதிர்பார்த்தபடியே அமைந்துவிடுவதும் படத்திற்கு பலவீனங்களாகி போய் விடுகிறது!அதே சமயம் தொழில்நுட்ப ரீதியாக இப்படத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும். குறிப்பாக நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. அருமை!. ஜி.வி.யின் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. எடிட்டிங்கும் ஓ.கே. இயக்குனரின் மாயம், ரசிகர்களை மயக்குமா? என்பது சந்தேகம் தான்!