நெறி கெட்டவர்களை குறி வைத்து சுட்டுத்தள்ளுவதில் போலீஸ் அதிகாரி விக்ரம் பிரபு ( பிர்லா போஸ்.) கெட்டிக்காரர் . அரசு தரப்புக்கு இவரது சேவை அவசரத் தேவை.
“பெண் வேணுமா,பிஸ்டல் வேணுமா “என ஹன்சிகாவின் அப்பா கேட்க , அரசினரோ “ஒரு மாவோயிஸ்ட்டைப் போட்டுத்தள்ளனும் புறப்பட்டுப் போ ராமேஸ்வரம்” என்று அனுப்புகிறது.
புண்ணியஸ்தலம் போன விக்ரம் பிரபு போட்டுத் தள்ளினாரா.இல்லையா என்ன நடந்தது என்பது கதை.
கதை சொல்வதில் செல்வராஜை விஞ்சியவர் எவருமில்லை என்று திரை உலக ‘ராஜா’க்களால் பாராட்டு பெற்ற செல்வராஜின் பிள்ளை தினேஷ் செல்வராஜ்தான் இயக்குநர். கதையை படமாக்குவதில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது.
கருத்துள்ள கதை. கொலைக்கு கொலை தீர்வாகாது என்பது மூன்றாம் உலகத்து முடிவு. அதை எப்படி சொல்லியிருக்கிறார்கள் என்பதுதான் துப்பாக்கி முனை! ஆள் பலம் அதிகார பலம் என திமிர் குறையாமல் கொலைகளை ரசித்து செய்யும் வேல.ராமமூர்த்தியின் எதிர்பாராத முடிவு அதைத்தான் சொல்கிறது என்று நம்பலாம்.
முன்னொரு காலத்தில் மதுரை நகரத்தில் பிர்லா போஸ் என்கிற இன்ஸ்பெக்டர் இருந்தார். கைத்தடியை எடுத்தாலே கழிவறையைத் தேடுவார்கள் ரவுடிகள்.
அவரது பெயரில் விக்ரம் பிரபு மிடுக்குக் குறையாமல் நடித்திருக்கிறார். ஜேம்ஸ்பாண்டின் இறுக்கம்,விடைப்பு,தீர்க்கமாக சிந்திப்பது எல்லாம் கலந்த கலவையாக வருகிறார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுக்கு இருக்க வேண்டிய கம்பீரம் அசலாக இருக்கிறது.
ஒரு நிரபராதி செத்து விடக்கூடாது என்கிற அவரது மெனக்கெடல் காட்சிகளில் இயக்குநர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
நாவிதராக எம்.எஸ்.பாஸ்கர். தனது ஒரே மகள் காமுகர்களின் வேட்கைக்கு இரையாகி விட்டாள் என்பதை அறிந்து குமுறி அழுது, பலி வாங்க பலிபீடம் வரை சென்றவர் நொடியில் மனம் மாறி மீடியாக்களில் கலங்குவது எதிர்பாராத ஒன்று.
தனக்கு சவரம் செய்கிறவனுக்கு இருக்கிற மனம் தனக்கு இல்லாமல் போய்விட்டதே, குணத்தில் அவனை விட தாழ்ந்து விட்டோமே என மனம் நொந்து வேல.ராமமூர்த்தி மரணத்தை நாடுவது எதிர்பாராதது.
கோவிலையும் கடை வீதிகளையும் படம் பிடித்து இதுதான் ராமேஸ்வரம் என காட்டிய முந்தைய ஒளிப்பதிவாளர்களை விட “இதுதான் ராமேஸ்வரம்”என புதிய உலகத்தை காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராசமதி.
நமக்கே நம்பமுடியவில்லை. ராமேஸ்வரத்தின் இன்னொரு முகம். அழகு.ஆச்சரியம்.வடுக்கள் இல்லாத அந்த நெடுஞ்சாலை,கடல் பாலமும் நீலக்கடலும் கண்களை கொள்ளை கொள்கிறது. சஹாரா பாலைவனம் போல நமக்கும் ஒரு மணல்கடல். ராசமதிக்கு வாழ்த்துகள்.
முத்துக் கணேஷின் இசை இனிமை. பின்னணி இசை கதை ஓட்டத்துக்கு துணை மாப்பிள்ளையாக இருக்கிறது.