பகுத்தறிவு பகலவன் ,வெண்தாடி வேந்தர் , திராவிட இனக்காவலர் என்றெல்லாம் வணங்கப்பட்ட தந்தை பெரியாரை பிறந்த நாள் ,மறைந்த நாளில் நினைவு கூறுகிற நிலைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது.
அவரது கொள்கைகளை பரப்புவது பற்றி வலிமையான பிரசார எந்திரங்களை கைகளில் வைத்திருக்கிற கழகத்தவரே சிந்திப்பதில்லை.
ஆனால் சிம்பு மட்டும் பெரியாரை நினைவில் வைத்துக் கொண்டிருப்பது ஏன்?
எஸ்.டி.ஆரின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிற தீபன்,சஞ்சய் மற்றும் சிலர் திராவிட இன பற்று உள்ளவர்கள்.
பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளில் பற்றுக் கொண்டவர்கள்.
இவர்கள் சேர்ந்து மதன் கார்க்கி வரிகளில் ரமேஷ் தமிழ்மணி இசையில் பெரியார் குத்து என்கிற பாடலை நாளை வெளியிடுகிறார்கள்.
பாடி இருப்பவர் எஸ்.டி.ஆர்.
இவருக்கென மாபெரும் இளைஞர் பட்டாளம் இருக்கிறது. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தமிழீழ இளைஞர்கள்.
பாடலை எழுதியிருக்கிற மதன் கார்க்கியிடம் பேசினேன். உருவானவிதம் பற்றி கேட்டேன்.
“ரமேஷ் தமிழ்மணி கட்டிட கலைஞர்.அவரும் நானும் தனியாகப் பல பாடல்கள் பண்ணியிருக்கிறோம். காதலைப் பற்றி..சமூகத்தைப் பற்றி…!
குத்துப்பாட்டு பண்ணினால் என்ன என்று ஒருநாள் யோசித்தபோது நல்ல கான்செப்ட் வேண்டுமே என்ன பண்ணலாம் எனத் தோன்றியது.
பெரியார் இன்று இருந்தால் என்ன சொல்லியிருப்பார்,என்னென்ன வார்த்தைகளைப் பயன்படுத்துவார் அவைகளைப் பயன்படுத்திப் பண்ணலாமே என தோன்றியது.
எழுதினேன்.வலிமையான வார்த்தைகள் இருந்தது.
சமூகப்பார்வைக்கு சரியாகவே இருந்தது.
இதை யாரை பாட வைக்கலாம்,.?
சிம்புவிடம் சென்று காட்டினோம்.
“மிகவும் நன்றாக இருக்கிறது. இதை நானே பாடுகிறேன்.ஆடுகிறேன்”என சொல்லி முழுமையான ஆர்வத்துடன் அக்கறையுடன் பண்ணினார்.
மதத்தையோ கட்சிகளையோ நாங்கள் காயப்படுத்தவில்ல.
ஒட்டு மொத்த சமூகம் செல்லும் பாதையைப் பற்றி சொல்லியிருக்கிறோம்.
அடிக்கடி பயன்படுத்தும் வெங்காயம் என்கிற வார்த்தை அடிக்கடி இடம் பெற்றிருக்கிறது.
சாதிச்சவன் சாதி என்னென்னு கூகுள்ல போயி தேடாதேவே!”
ராக்கெட் ஏறி வாழ்க்கை போகிறப்ப சாக்கடைக்குள் முங்காதே வே!”என்பது போன்ற வரிகள் இருக்கின்றன “என்றார் மதன் கார்க்கி.
—தேவிமணி.